யாருக்கும் பயன்படாத பிளான்: அதிகாரிகளை கடிந்த அமைச்சர்

சென்னை,”சமூக நல மையத்தை திறந்த வெளி அரங்கு போல் கட்ட திட்டமிட்டுள்ளீர்கள். யாருக்கும் பயன்படாத, ‘பிளான்’ போட்டு என்ன பயன்; வரைபடத்தை மாற்றுங்கள்,” என, அமைச்சர் சேகர்பாபு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார்.

சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, எழில் நகரில், சமூக நல மையம் மற்றும் சந்தை கட்ட, சி.எம்.டி.ஏ., நிதியில் இருந்து, 9.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணி சில நாட்களுக்கு முன் துவங்கியது. இந்த பணியை, நேற்று அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.

சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனம், வரை படங்களை காட்டி, பணி குறித்து அமைச்சரிடம் விளக்கினர். கட்டுமான பணியில் திருப்தி அடையாத அமைச்சர், அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

அப்போது, அவர் கூறியதாவது:

திறந்தவெளி அரங்கு போல் கட்ட பிளான் போட்டுள்ளீர்கள். அதை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆறு மாதத்தில் சீர்கேடாக மாறிவிடும். அதிக கடைகள் கொண்ட கட்டடமாக கட்ட திட்டமிட்டு இருக்க வேண்டும்.

பல்நோக்கு மையம் கட்டி, சிறிய நிகழ்ச்சி நடத்த பயன்படுத்தி, அதில் கிடைக்கும் வருவாயில் இருந்து பராமரிக்கும் வகையில் திட்டமிட்டிருக்க வேண்டும்.

பாய்ஸ் கிளப், நுாலகம் கட்டலாம். யாருக்கும் பயன்படாத பிளான் போட்டுள்ளீர்கள். சரியாக திட்டமிடவில்லை. எனக்கே திருப்தி இல்லை. எப்படி மக்களுக்கு நல்ல திட்டமாக அமையும். வரைபடத்தை மாற்றுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரைபடத்தை மாற்றியபின் கட்டுமான பணி துவங்கும் என, அதிகாரிகள் கூறினர். அமைச்சருடன், சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், கவுன்சிலர் ஏகாம்பரம் உள்ளிட்டோர் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து, பிராட்வே சாலையிலுள்ள பாரதி மகளிர் கல்லுாரியில், சி.எம்.டி.ஏ., சார்பில் புதிதாக கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்தனர்.

இதில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வீட்டு வசதி துறை செயலர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரூ.20 கோடியில் புது கட்டடம்

சென்னை அண்ணா பல்கலையில், கட்டடக்கலை மற்றும் நகர்ப்புற திட்டமிடல் கல்லுாரி, 1964 முதல் தனியாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஏற்கனவே, இளங்கலை நகர்ப்புற திட்டமிடல் படிப்பு உள்ளது. கூடுதலாக, போக்குவரத்து திட்டமிடல் படிப்பிற்கு உதவ சி.எம்.டி.ஏ., முன் வந்தது. இதற்காக, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அண்ணா பல்கலையின் தரமணி வளாகத்தில், 5,000 சதுர அடியில், மூன்று தளங்கள் கொண்ட, புதிய கட்டடம் கட்ட, இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த இடத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி.செழியன் மற்றும் சி.எம்.டி.ஏ., உயரதி காரிகள் நேற்று பார்வையிட்டனர். இதனால், நகர்ப்புற திட்டமிடல் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *