துறைமுகம் – மதுரவாயல் மேம்பால சாலை கூவத்தில் மீண்டும் கட்டுமான பணி துவக்கம்
சென்னை, சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையிலான இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணி, கூவத்தில் மீண்டும் துவங்கிஉள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும், துறைமுகம் வந்து செல்லும் கனரக வாகனங்களுக்கு வசதியாகவும், சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே, மேம்பால சாலை அமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்தது.
இதற்காக, 5,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கூவம் கரையில், இதே வழித்தடத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு துாண்கள் அமைத்து, 2009ம் ஆண்டு பணிகள் துவங்கின.
நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் பணிகள் நடப்பதாக, கடந்த 2011ல் பணிகள் நிறுத்தப்பட்டன.
தற்போது, இரண்டுக்கு மேம்பாலமாக மாற்றி கட்டும் பணி, மும்பையை சேர்ந்த ஜெ.குமார் இன்ப்ரா என்ற கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன் வரை எழும்பூர், சேத்துப்பட்டு, சிந்தாதிரிபேட்டை உள்ளிட்ட பல இடங்களில், கூவம் கரையில் துாண்கள் அமைப்பதற்காக, பூமிக்கடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக, கூவத்தில் கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்டன. இதனால், வடகிழக்கு பருவமழையில் நீரோட்டம் பாதிக்கும் என புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், பருவமழை துவங்கும்முன், கட்டட இடிபாடுகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி கட்டட இடிபாடுகள் அகற்றப்பட்டன. அங்கிருந்து கட்டுமான இயந்திரங்கள் வைக்கவும், ஊழியர்கள் தங்கவும் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகை உள்ளிட்டவையும் அகற்றப்பட்டன.
வடகிழக்கு பருவமழை ஓய்ந்த நிலையில், மீண்டும் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது. இதற்காக கூவம் கரையில் பணி நடந்து வருகிறது
பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 2010ம் ஆண்டுக்குமுன் அமைக்கப்பட்ட துாண்களை அகற்றும் பணியும் துவங்கிஉள்ளது.