ரெட்டேரியில் 6 இடங்களில் செயற்கையாக தீவுகள் குளறுபடி ஆழப்படுத்த ஒதுக்கிய நிதியை வீணடிப்பதாக எதிர்ப்பு
சென்னை :மாதவரம் ரெட்டேரியில் கொள்ளளவை அதிகரிப்பதாக கூறிவிட்டு, செயற்கை மண் தீவுகளை அமைத்து,அரசு நிதியை நீர்வளத்துறை வீணடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்கண்டிகை ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
சென்னை நகரின் ஒரு மாத குடிநீர் தேவை 1 டி.எம்.சி., என மதிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கேற்ப, சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, குடிநீர் ஏரிகளில் இருந்து நீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
வறட்சி காலங்களில், நீர் தேவையை சமாளிக்கும் வகையிலும், வரும்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், கூடுதல் நீராதாரங்களை உருவாக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
ரூ.48 கோடி
இதற்காக, மாதவரம் ரெட்டேரியை தேர்வு செய்து, அதன் கொள்ளளவை உயர்த்தும் பணிகளை மேற்கொள்ள, நீர்வளத்துறை முடிவெடுத்துள்ளது. இதற்காக, ரூ.48 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
முன்பு 772 ஏக்கராக இருந்த ரெட்டேரி, தற்போது 400 ஏக்கராக சுருங்கியுள்ளது. ஏரியின் குறுக்கே, சென்னை – கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
கொள்ளளவு உயர்த்தும் பணிக்கு பின், ஏரியில் 0.50 டி.எம்.சி., நீரை சேமித்து, வறட்சி காலத்தில் சென்னை நகரின் 15 நாள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, ஏரியின் ஒருபகுதியில் துார்வாரும் பணி, கடந்தாண்டு மார்ச் மாதம் துவங்கியது.
ஏரியை புனரமைக்கும் பணிகளை முழுமையாக, செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
துார்வாரும் பணிக்காக, ஏரியில் இருந்து அகற்றப்படும் வண்டல் மண்ணை பயன்படுத்தி, கரையை பலப்படுத்தி, நடைபயிற்சிக்கான பாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும்.
ஒரு பகுதியில், 70 சதவீத பணிகள் முடிந்த நிலையில், அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழையால் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது, ஏரியில் உள்ள நீரை திறந்துவிட்டு, மீண்டும் பணிகளை மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏரியில் பறவைகள் தங்குவதற்கு இரண்டு புறங்களிலும் தலா மூன்று செயற்கை தீவுகளை உருவாக்க, நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக ஏரியில் கிடைக்கும் வண்டல் மண்ணை அகற்றி அப்புறப்படுத்தாமல், அதனுள் பிரமாண்ட தீவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வருங்காலங்களில், மழையில் அவை கரைந்து மீண்டும் ஏரி துார்ந்துபோகும் வாய்ப்புள்ளது. இதனால், அரசு நிதி வீணாகும் வாய்ப்புள்ளது.
மண் திட்டு
நீர்வளத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏரியை முழுமையாக துார்வாரி நீரை சேமிக்க, உரிய கண்காணிப்புகளை அரசு மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக மாநில குடியிருப்போர் நலச்சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் டி.நீலக்கண்ணன் கூறியதாவது:
ரெட்டேரி ஏரிக்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை சரியாக கண்டறிந்து, அகற்ற வேண்டும். ஒப்பந்ததாரர், குறிப்பிட்ட காலத்திற்குள் தேவையான தளவாடங்களை கொண்டு, துரிதமாக செயல்பட்டு ஏரியை ஆழப்படுத்தவில்லை.
மூன்று இடங்களில் தேவையின்றி, அதிக பரப்பளவில் மூன்று மண் திட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், ஏற்கனவே இருந்த அளவு கூட தண்ணீரை சேமிக்க முடியாது.
மூன்று மண் திட்டுகளுக்கு பதில், ஒரே திட்டு மட்டுமே அமைக்க வேண்டும். அப்போது அதிக நீரை சேமிக்க முடியும்.
ஏரியை அனைத்து பகுதியிலும் ஆழப்படுத்த வேண்டும். இதை அரசு முறையாக கண்காணிக்க வேண்டும். இவ்வளவு பெரிய ஏரியில் உபரிநீரை வெளியேற்ற கால்வாய் இல்லை.
மழைக்காலத்தில் வெளியேற்றப்படும் நீர், மாதவரம் நெடுஞ்சாலையில் தேங்கி, போக்குவரத்தை பாதிக்கிறது. இப்பிரச்னைக்கு, அரசு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.