அடையாறு சார்பதிவாளர் அலுவலகம் நவீன வசதிகளுடன் நாளை திறப்பு: பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு
சென்னை: நவீன வசதிகளுடன் அடையாறு சார் பதிவாளர் அலுவலகத்தை அமைச்சர்கள் நாளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கின்றனர் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத் துறையில் 585 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தினந்தோறும் சராசரியாக 15,000 பொதுமக்கள் பத்திரப் பதிவு சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பதிவுத்துறையில் முதல் முறையாக நவீன வசதிகளுடன் கூடிய மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் (அடையாறு சார்பதிவாளர் அலுவலகம்) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ஆகியோரால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நாளை காலை திறந்து வைக்கப்படுகிறது. எனவே அடையாறு சார்பதிவாளர் எல்லைக்கு உட்பட்ட பொதுமக்கள் (அடையாறு சார்பதிவாளர் அலுவலகம், எண். 10/55, எல்.பி. ரோடு, காமராஜர் நகர், TNHB கட்டடம், 3வது மாடி, திருவான்மியூர்) இந்த அலுவலகத்தை வரும் 30ம் தேதி முதல் பயன்படுத்திக் ெகாள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.