மூளை ரத்தக்கசிவுக்கு சிறப்பு சிகிச்சை: காவேரி மருத்துவமனை அசத்தல்
சென்னை: மூளை ரத்தக்கசிவுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து பெண் உயிரை காவேரி மருத்துவமனை காப்பாற்றி உள்ளது. மருத்துவ பிரச்னைகள் இல்லாத பெண், வீட்டில் திடீரென மயங்கி விழுந்து நினைவிழந்தார். சென்னை காவேரி மருத்துவமனையின் அவசரநிலை சிகிச்சை துறைக்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு உடனடியாக உரிய பரிசோதனைகளும், மதிப்பாய்வும் செய்யப்பட்டது. அதில் ரத்தநாளத்தில் பலவீனமான பகுதி கிழிந்து, அதன் காரணமாக மூளைக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருந்தது. மூளையின் அடிப்பகுதியில் ஒரு முக்கியமான ரத்தநாளத்தில் இந்த குருதிநாள அழற்சி அமைந்திருந்தது. மூளை நரம்பியல் மருத்துவர்கள் இடையீட்டு கதிரியக்க சிகிச்சையாளர்கள் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்களை உள்ளடக்கிய ஒரு பன்முக குழு, குருதிக்குழாயினுள் (எண்டோவாஸ்குலர்) இடையீட்டு சிகிச்சை என அழைக்கப்படும் ஒரு நவீன, குறைவான ஊடுருவலுள்ள அணுகுமுறையை மேற்கொள்ள முடிவு செய்தது. மருத்துவக் குழுவினர் ரத்த ஓட்டத்தை சரி செய்ய வெற்றிகரமாக ஸ்டெண்ட் பொருத்தினர்.
இது தொடர்பாக காவேரி மருத்துவமனை மருத்துவர் சத்ய நாராயணன் கூறியதாவது: குருதிநாள அழற்சி என்பதால் இச்சிகிச்சை அதிக சவாலானதாக இருந்தது. எனினும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனுபவமிக்க மருத்துவர்களின் ஆதரவோடு இச்சிகிச்சை செயல்முறையை வெற்றிகரமாக எங்களால் மேற்கொள்ளவும், மேலதிக சிக்கல்கள் உருவாகாமல் தடுக்கவும் முடிந்தது. இந்த சிகிச்சை செயல்முறை குறித்து முடிவெடுக்கும் செயல்முறையில் இந்த பெண் நோயாளியின் குடும்பத்தினர் முழுமையாக கலந்தாலோசிக்கப்பட்டனர். அவர்களின் ஆதரவு மிகச் சிறப்பானதாக இருந்தது. இத்தகைய உயிருக்கு ஆபத்தான பாதிப்பிலிருந்து மீண்டு இந்நோயாளி குணமடைந்து வருவதை காண்பது பெரும் மனநிறைவளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.