முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன் பெற முன்னாள் படை வீரர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது: கலெக்டர் தகவல்
சென்னை: முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் பயன்பெற முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது என்று சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 78வது சுதந்திர தின உரையின்போது, முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோரை தொழில் முனைவோராக உருவாக்கிட முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார். இத்திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் வாயிலாக கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும், இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30% மூலதன மானியமும், 3% வட்டி மானியமும் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வரசாணையில் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப்பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் எனவும், 55 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் / ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும் / முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் விதவை மகள்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள்/ ராணுவ பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள்/முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் விதவை மகள்கள் ஆகியோர் சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.