தமிழக போலீசார் அதிரடி ; கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ச்சி
சென்னை; கிரிக்கெட் போட்டி முடிந்து, இரவு வீடுகளுக்கு புறப்பட்ட ரசிகர்கள், பாதுகாப்பாக பயணம் செய்வதை, போலீசார் உறுதிப்படுத்தியது, வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில், நேற்று முன்தினம், இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான, இரண்டாவது ‘டி20’ கிரிக்கெட் போட்டி நடந்தது. இரவு 11:10 மணிக்கு போட்டி முடிந்து, ரசிகர்கள் வாடகை வாகனங்களில், தங்கள் வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது, அங்கிருந்த போலீசார், ரசிகர்கள் ஏறிய வாடகை வாகனங்களின் டிரைவர் பெயர், மொபைல் எண், வாகனத்தின் பதிவு எண் போன்ற விபரங்களை, ஒரு படிவத்தில் பதிவு செய்து கொண்டனர்
ரசிகர்களிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால், எங்களை தொடர்பு கொள்ளுங்கள் எனக்கூறி, தங்கள் மொபைல் எண்களை கொடுத்தனர். டிரைவர்களிடம் கவனமாக கொண்டு போய் விடுங்கள் என அறிவுரை கூறி அனுப்பினர். இது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து போலீசார் கூறுகையில்,’ இரவு நேரம் என்பதால், பெண்கள், குழந்தைகள், வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் உள்ளூர் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டோம்’ என்றனர்