மயங்கி விழுந்த சிறுவனுக்கு சுகாதார அமைச்சர் உதவி
சென்னை, சென்னை, சைதாப்பேட்டை சி.ஐ.டி., நகரை சேர்ந்த தியாகராஜன் – கலைவாணி தம்பதியின், 5 வயது சிறுவன். நேற்று காலை, 8:40 மணியளவில் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தான்.
அப்போது, அவ்வழியாக உடற்பயிற்சி செய்து, வீடு திரும்பி கொண்டிருந்த அமைச்சர் சுப்பிரமணியன், அங்கு சென்று பார்வையிட்டார். உடனே அவரது வாகனத்திலேயே, சிறுவனை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு நடந்த பரிசோதனையில், சிறுவனுக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது சிறுவன் நலமுடன் உள்ளான்.
இதய பாதிப்புக்கான அனைத்து சிகிச்சைகளையும் சிறுவனுக்கு அளிக்கும்படி, அமைச்சர் சுப்பிரமணியன், டாக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். பெற்றோரிடம், சிறுவனின் தற்போதைய நிலைமை எடுத்துரைக்கப்பட்டு, உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.