மழைநீர் வடிகால் திட்டப்பணி மந்தம் மடிப்பாக்கத்தில் தொடரும் நெரிசல்

மடிப்பாக்கத்தில் பஜார் பிரதான சாலை, சபரி, கார்த்திகேயபுரம், பொன்னியம்மன் கோவில் உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் நான்கு முனை சந்திப்பு பிரதானமானது.

நான்கு சாலையிலும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சந்திப்பை சுற்றி, 10க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகள் உள்ளன.

குறிப்பிட்ட சந்திப்பை நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள், மாநகர பேருந்துகள் கடந்து செல்கின்றன.

பள்ளி நாட்களில், காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அரங்கேறி வருகின்றன.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சந்திப்பில் இருந்த பழைய பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டது. அதன் பின்னும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை

ஏற்கனவே, மெட்ரோ ரயில் திட்டப்பணியால் மடிப்பாக்கம், உள்ளகரம், கீழ்க்கட்டளை பகுதி மக்கள் போக்குவரத்து பிரச்னையால் ஓராண்டிற்கு மேலாக தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மடிப்பாக்கம் நான்கு முனை சந்திப்பில், கடந்த மாதம் மழைநீர் வடிகால் பணி துவக்கப்பட்டது. மிகவும் குறுகலான அந்த சந்திப்பில், வாகனங்கள் சென்று வருவதற்கு உரிய வழி செய்யாமல் பணிகள் துவக்கப்பட்டன.

மடிப்பாக்கத்தில் இருந்து கீழ்க்கட்டளையை கடக்க, அது ஒன்றுதான் பிரதான வழித்தடம். இருப்பினும், மந்தமாக பாதாள சாக்கடை திட்டப் பணி நடந்து வருகிறது.

இதனால், அச்சாலையில் தினசரி காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக, பள்ளி செல்லும் மாணவ – மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து போலீசார் அங்கு பணியமர்த்தப்பட்டாலும், போக்குவரத்தை சீரமைக்க முடியாத நிலை உள்ளது.

மேலும், மழைநீர் வடிகால் பணியை முடிக்கும் வரை, மாற்று வழியில் வாகனங்களை இயக்க, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லாததால், போக்குவரத்து போலீசார் தவித்து வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

– -நமது நிருபர்- –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *