இந்தியாவிலேயே முதல் முறையாக எண்டோஸ்கோபிக் முறையில் மார்பக புற்றுநோய் கட்டி அகற்றம்: அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் சாதனை
சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக எண்டோஸ்கோபிக் முறையில் மார்பக புற்றுநோய் கட்டியை அகற்றி அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் சாதனை படைத்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் உணவு விடுதியில் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், அப்போலோ மருத்துவமனை மார்பக ஆன்கோபிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் மஞ்சுளா ராவ், அப்போலோ குழும புற்றுநோயியல் பிரிவு தலைவர் தினேஷ் மாதவன், மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி கரண் பூரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நிருபர்களிடம் ஆன்கோபிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் மஞ்சுளா ராவ் பேசுகையில் ‘‘மார்பக புற்றுநோய் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி உலகளவில் பெண்கள் மத்தியில் மிக அதிகமாக காணப்படும் நோயாக உள்ளது. இதன் காரணமாக ஆண்டுதோறும் உலகளவில் 2.3 மில்லியன் நபர்கள் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். அதன்படி, இந்தியாவிலேயே முதல் முறையாக எண்டோஸ்கோபிக் முறையில் மார்பக புற்றுநோய் பாதித்த பகுதியை மட்டும் அகற்றுவது மற்றும் மறுசீரமைப்பு செய்யும் அறுவை சிகிச்சையை அறிமுகம் செய்துள்ளோம்.
இதன் மூலம் நோயாளி விரைவாக குணமடைவதுடன் உணர்வு ரீதியாகவும், அழகியல் சார்ந்த கவலைகளும் ஏற்படாத வண்ணம் புதிய தீர்வினை கண்டுள்ளோம். இந்த அறுவை சிகிச்சை முறை மருத்துவத்துறையில் முன்னேற்றமாகவும், நோயாளிகளுக்கான விருப்ப தேர்வாகவும் உள்ளன. மேலும், மார்பக புற்றுநோயால் அவதியடையும் பெண்கள் அறுவைசிச்சை முறைகளில் நிகழ்ந்திருக்கும் முன்னேற்றத்தை கண்டு அதன் மூலம் ஆதாயமடைவதற்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.