பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சத்தில் டயாலிசிஸ் பிரிவு

பூந்தமல்லி:பூந்தமல்லியில் 1975ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடந்த 2010ம் ஆண்டில் 32 படுக்கைகள் கொண்ட தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த மருத்துவமனையில் பொது மருத்துவம், அவசர சிகிச்சை பிரிவு, ஆண், பெண் மற்றும் குழந்தைகள் நல மருத்துவம், மகளிர் மருத்துவம், அறுவை சிகிச்சை பிரிவு, மக்களை தேடி மருத்துவம், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், 108 இலவச அவசர ஊர்தி மற்றும் பல்வேறு சிறப்பு மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவமனை மூலம் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் கலெக்டரின் பொது நல நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 3 டயாலிசிஸ் கருவிகள் கொண்ட புதிய டயாலிசிஸ் பிரிவு இந்த மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த டயாலிசிஸ் பிரிவு திறப்பு நிகழ்ச்சி, இணை இயக்குனர் சுகாதாரம் (பொ) சேகர் தலைமையில் நேற்று மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.

கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. புதிய டயாலிசிஸ் பிரிவை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது, புதிய டயாலிசிஸ் பிரிவு மேலும் 6 படுக்கைகள் கொண்ட பிரிவாக விரைவில் தரம் உயர்த்தப்படும். இந்த டயாலிசிஸ் சிகிச்சை பிரிவினை சிறுநீரக நோயாளிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கிருஷ்ணசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *