திருவொற்றியூரில் கொசு மருந்து அடிப்பதில்லை தி.மு.க. , கவுன்சிலர் குற்றச்சாட்டு
திருவொற்றியூர்:திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தலைவர் தனியரசு தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. உதவி கமிஷனர் புருஷோத்தமன், மண்டல நல அலுவலர் லீனா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், 76 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசினர்.
கோமதி, 2வது வார்டு சுயேட்சை கவுன்சிலர்:
வள்ளுவர் நகரில், 200 மீட்டர் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் விடுபட்டுள்ளன. சிவன் படை வீதிக் குப்பத்தில், சாலை சரியாக போடவில்லை. கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். உடற்பயிற்சி கூடம் அமைத்தும் திறக்கப்படவில்லை.
ஜெயராமன், 4வது வார்டு மார்க்.கம்யூ., கவுன்சிலர்:
மணலி விரைவு சாலையில், முல்லை நகர் – சத்தியமூர்த்தி நகர் வரை, மூன்று பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஆனால், ‘கிராசிங்’ கிடையாது. அணுகு சாலை அமைக்க வேண்டும். எதிர்திசையில் பயணித்தால் விபத்து நடக்கிறது. ஜோதி நகரில்
ரவுண்டானா தேவை. கன்டெய்னர் லாரி போக்குவரத்தால், அடிக்கடி கடும் நெரிசல் ஏற்படுகிறது.
சொக்கலிங்கம், 5வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்:
பாரத் நகரில், சமுதாய கூடம் அமைக்க வேண்டும். பழுதடைந்த வடக்கு பாரதியார் நகர் கழிப்பறையை சீரமைக்க வேண்டும். கடற்கரை தெருவிளக்குகள் உப்பு காற்றால் துருப்பிடித்துள்ளதால் மாற்ற வேண்டும். கொசு மருந்து சரிவர அடிப்பதில்லை. மின் பெட்டிகளை உயர்த்தி அமைக்க வேண்டும்.
சாமுவேல் திரவியம், 6வது வார்டு காங்., கவுன்சிலர்:
கலைஞர் நகரில் உயர் மின் அழுத்த பிரச்னை உள்ளது. பழதடைந்த சுப்ரமணியம் நகர் – ஈமசடங்கு நடத்தும் மண்டபத்தை, இடித்து விட்டு, சுகாதார ஆய்வாளர் அலுவலகம் கட்டி தர வேண்டும். அம்பேத்கர் நகரில், வார்டு அலுவலகம் அமைக்க வேண்டும். மணலி விரைவு சாலையில், விடுப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
கார்த்திக், 7வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்:
பகிங்ஹாம் கால்வாய் ஒட்டிய சாலையில், மாநகர பேருந்து செல்கிறது. அதை சீரமைக்க வேண்டும் என, இரண்டு ஆண்களாக கோரி வருகிறேன். சார்லஸ் நகர், ஹன்ஷா அபினவ் பகுதிகளுக்கு பாதாள சாக்கடை போட வேண்டும். கார்கில் நகரில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு எப்போது கிடைக்கும்.
தனியரசு, திருவொற்றியூர் தி.மு.க., மண்டல குழு தலைவர்.
சென்ட்ரலில் இருந்து, வடமாநிலங்களுக்கு செல்லும் மற்றும் வரும் ரயில்களும், விம்கோ நகர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டிய ஏற்பாடுகளை, வடசென்னை எம்.பி., கலாநிதி மேற்கொண்டுள்ளார். அதற்கான பணிகள் நடக்கின்றன. விரைவில், விம்கோ நகரில் அனைத்து விரைவு ரயில்களும் நிற்கும். அண்ணாமலை ரயில்வே சுரங்க பாதை பணிகள், 15 நாட்களில் துவங்கும். சுனாமி குடியிருப்பு – மல்லிகாபுரம் ஆரம்ப சுகாதார மையங்கள், சிறப்பான பராமரிப்பிற்கான, மத்திய – மாநில அரசுகள் பெற்றுள்ளன.