பள்ளிக்கரணை சாலையில் நடைபாதை கடைகளால் அச்சம்
பள்ளிக்கரணை:பெருங்குடி மண்டலம், வார்டு 189க்கு உட்பட்டது பள்ளிக்கரணை. இங்கு, கைவேலி சிக்னல் முதல் பாலாஜி நகர் சிக்னல் வரை, 100க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன.
இந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருவோர், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை, சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். இதனால் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்பட்டு, விபத்து அச்சமும் நிலவுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வேளச்சேரி – பள்ளிக்கரணை இடையிலான சாலையில், பகலில் ஒரு மணி நேரத்திற்கு 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. ‘பீக்ஹவர்ஸ்’ நேரத்தில் இந்த எண்ணிக்கை 3,000க்கும் மேல் அதிகரிக்கும். இதில், கைவேலி சிக்னல் முதல் பாலாஜி நகர் சிக்னல் வரை, ஒரு கி.மீ., துாரத்தில் 100க்கும் மேற்பட்ட நடைபாதைக் கடைகள், முன்பு அமைக்கப்பட்டிருந்தன.
இதனால், போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்படுவதாக தொடர் புகார் வந்ததால், ஆறு மாதங்களுக்கு முன், போலீசாரால் கடைகள் அகற்றப்பட்டன.
சில மாதங்களாக, மீண்டும் முளைக்கத் துவங்கி, 100க்கும் மேற்பட்ட கடைகள் வந்துவிட்டன. கடைகளுக்கு வருவோர், வழக்கம்போல், கார், இருசக்கர வாகனங்களை, சாலையை ஆக்கிரமித்து நிறுத்துவதால், சாலை பாதியாக சுருங்கி, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
பெரும் விபத்து ஏற்படும் முன், அதிகாரிகள், இக்கடைகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்