அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பாழாகும் ஆவடி ‘அம்மா’ திருமண மண்டபம்

ஆவடி:கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மக்கள் நியாயமான கட்டணத்தில், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த ‘அம்மா’ திருமண மண்டபம் கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டது. சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்துார் மற்றும் மதுரவாயல் பகுதிகளில், 35 கோடி மதிப்பீட்டில் அம்மா திருமண மண்டபம் அமைக்க, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அந்த வகையில், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், கடந்த 2019ல் 15 கோடி ரூபாய் மதிப்பில் 29,497 சதுர அடி பரப்பளவில், அம்மா திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. மூன்று தளங்களை கொண்ட அம்மா திருமண மண்டபத்தில், 50 இலகுரக வாகனங்கள், 75 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் உள்ளன.

முதல் தளத்தில், நவீன சமையலறை வசதியுடன் 300 பேர் உணவருந்தும் இடம். இரண்டாவது தளத்தில் குளிர்சாதன வசதியுடன், 650 பேர் அமரும் வகையில், விழா மண்டபம், மணமகன், மணமகள் அறை ஆகியவை அமைந்துள்ளன.

மூன்றாவது தளத்தில், விருந்தினர் தங்கும் அறை, தனித்தனி கழிப்பறை வசதிகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், சூரிய மின்சக்கதி வாயிலாக மின்சாரம் பெறும் வசதி, ‘சிசிடிவி’ கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள், தனியார் திருமண மண்டபங்களுக்கு இணையாக, அம்மா திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகியும், இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பாழாகி வருகிறது.

தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தாலும், ‘அம்மா’ என்ற பெயர் இருப்பதாலும், ஆளும் தி.மு.க., அரசு, அம்மா திருமண மண்டபத்தை திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு வலுத்துள்ளது. அதிகாரிகள் அதற்கு உடந்தையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு, அம்மா திருமண மண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா மண்டபம் திறக்கப்படாமல் இருப்பதால், அரசு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை பயன்படுத்தி, தனியார் மண்டபங்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகிறது. ‘அம்மா’ என்ற பெயர்தான் பிரச்சனை என்றால்; பெயர்

மாற்றி திருமண மண்டபத்தை திறக்க வேண்டும்’ இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *