600 பேருக்கு மறுசுழற்சி பை தந்து குப்பை தரம் பிரிக்க விழிப்புணர்வு
சென்னை:’சாஹஸ்’ தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், ‘நீலக்கடல் துாய்மை பட்டினம்’ என்ற பெயரில், மறுசுழற்சி செய்யப்படும் குப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள மயிலாப்பூரில் நடந்தது.
இதில், 125வது வார்டில் உள்ள, 600க்கும் மேற்பட்டோருக்கு, மறுசுழற்சி கைப்பைகள் வழங்கப்பட்டன. மக்கும் மற்றும் மக்கா குப்பை தரம் பிரிப்பது, சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்த செயல்முறைகள் விளக்கப்பட்டன.
இதுகுறித்து, தொண்டு நிறுவன நிர்வாகி கூறியதாவது:
மின்சாதனம், பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்கள், கிளியாத துணிகள், காகிதங்கள் மற்றும் அட்டைகள், உடையாத கண்ணாடி பாட்டில்கள் போன்ற பழைய பொருட்களை குப்பையில் வீசாமல், அவற்றை சேகரித்து மறுசுழற்சி செய்கிறோம்.
இதில் கிடைக்கும் பணத்தை வைத்து, அந்தந்த வார்டு மக்களுக்கு தேவையான உதவிகள், மாணவர்களுக்கு பேக், துணி, நோட்டு புத்தகம் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறோம். எங்கள் முயற்சிக்கு மக்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இதை இன்னும் விரிவுபடுத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நிகழ்ச்சியில், மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வேலு, கவுன்சிலர் ரேவதி ஆகியோர் பங்கேற்றனர்.