மழைநீர் கட்டமைப்பு இல்லா விட்டால் குடிநீர் துண்டிப்பு.. .எச்சரிக்கை !:12 லட்சம் கட்டடங்களில் ஆய்வை துவக்குது வாரியம்

சென்னையில் மழைநீர் வீணாக கடலில் கலந்து வரும் நிலையில், பல ஆண்டுகளாக செயல்பாடின்றி முடங்கியுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர, சென்னை குடிநீர் வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. சென்னையில், 12 லட்சம் கட்டடங்களில் ஆய்வை துவக்கும் வாரியம், சரியான கட்டமைப்பு இல்லாத கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு ‘நோட்டீஸ்’ அளிப்பதோடு, தொடர்ந்து அலட்சியம் காட்டினால், குடிநீர் இணைப்பை துண்டிக்கவும் முடிவு செய்துள்ளது.

சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும், அதை சேமித்து வைக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லை. இதனால் நிலத்தடி நீர் குறைந்து கிணறு, ஆழ்துளை கிணறுகள் துார்ந்து வருகின்றன. தவிர, கடினப்பாறை, களிமண், மணல்பரப்பு ஆகிய அடுக்குகளால் சென்னை நில பரப்பு அமைந்திருப்பதால், நீரை உள்வாங்கும் திறன் குறைகிறது.

இதனால், நீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2001ம் ஆண்டு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை துவங்கினார்.

நிலத்தடிநீர் குறைவு

அப்போது, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தாத கட்டடங்களில், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் அறிவித்தார். இந்த அதிரடி நடவடிக்கையால், பெரும்பாலான கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டது. ஆனால், 2006 முதல் 2015ம் ஆண்டு வரை இருந்த அரசுகள், மழைநீர் சேகரிப்பில்

ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், சென்னையில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு, வீடு, அலுவலகம் கட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அக்கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக அமைக்கப்பட்டுள்ளதா; ஏற்கனவே கட்டிய வீட்டில் மழைநீர் தொட்டியின் தற்போதைய நிலை குறித்து, வாரியம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த பருவமழைக்கு முன், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் என, 110 கட்டடங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெரும்பாலான கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாததும், இதனால் நிலத்தடி நீர் குறைந்து வருவதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் ஆய்வு செய்யும் நடவடிக்கையில், குடிநீர் வாரியம் ஈடுபட்டுள்ளது.

குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம், கையேடு வழங்கியும், வாகனங்கள் வழியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மழைநீரை சேமிப்பது குறித்து அரசு அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பப்படுகிறது; இருந்தும், பலர் அலட்சியமாக உள்ளனர்.

ஒத்துழைப்பு

அதனால், சென்னையில் 12 லட்சம் கட்டடங்களில், முறையான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதா என, ஆய்வு செய்ய உள்ளோம். வாரிய ஊழியர்கள், தன்னார்வலர்களை கொண்டு, மொபைல் செயலி வழியாக கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்த பணியை ஓரிரு மாதத்தில் முடித்து, மழைநீர் கட்டமைப்பு ஏற்படுத்தாத கட்டடங்களுக்கு, ‘நோட்டீஸ்’ அளிக்கப்படும். தேவையான ஆலோசனைகள், தேவையான உதவிகள்தரப்படும்.

அதையும் மீறி அலட்சியமாக செயல்படும் கட்டட உரிமையாளர்களுக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். தவிர, சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். மழைநீர் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின்போது, சென்னை மற்றும் புறநகரில் ஏற்படும் வெள்ளப்பாதிப்பை தடுக்க, மழைநீரை உடனுக்குடன் கடலில் சேர்க்கும் வகையில், வடிகால், கால்வாய் போன்ற கட்டமைப்புகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன.

இதற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.

ஆனால், நீரை சேமிப்பதற்கு அரசு பெரியளவில் திட்டங்களை கொண்டு வரவில்லை. மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக கையாண்டால், தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. நில மற்றும் நீர்வளம் அதிகரிக்கும், நிலத்தடி நீர் குறையாமல் பாதுகாக்கப்படும்.

மேலும், கடலோர பகுதியில் கடல்நீர் ஊடுருவதையும், வெள்ள பாதிப்பையும் கட்டுப்படுத்த முடியும்; களிமண் பகுதி கட்டடங்களில் ஏற்படும் விரிசலையும் தடுக்கவும் முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

சென்னையின் மழையளவு

 

சேமிக்கப்படும் நீர் எவ்வளவு?120 செ.மீ.,ஓராண்டில் பெய்யும்சராசரி மழையளவு-4 கன அடிஒரு சதுர அடியில்பெய்யும் மழையளவு-113 லிட்டர்ஒரு சதுர அடியில்ஆண்டுக்குகிடைக்கும் மழைநீர்-மழைநீர், 40 சதவீதம் கடலில் கலக்கிறது; 35 சதவீதம் ஆகியாகிறது; 15 சதவீதம் பூமி உறிஞ்சுகிறது; 10 சதவீதம் மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. பூமிக்குள் செல்ல வேண்டிய நீரின் அளவை 60 சதவீதமாக (1.62 லட்சம் லிட்டர்) உயர்த்த, மழைநீர் சேகரிப்பு திட்டம் உதவும் என, வாரிய அதிகாரிகள் கூறினர்–12 லட்சம்கட்டடங்கள்-1 கோடி பேர்மக்கள் தொகை-100 கோடி லிட்டர்தினசரி தேவை

செலவு எவ்வளவு?

 

கிணறு உள்ள வீடுகளில், மொட்டை மாடியில் இருந்து வரும் மழைநீரை, நேரடியாக குழாய் வழியாக வடிகட்டி கிணறுகளில் விட முடியும். இதற்கு, குழாய் செலவு தான். ஆழ்துளை கிணறு உள்ள வீடுகளில், சுற்றி உள்ள காலி இடத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கலாம். வீட்டின் சதுர அடி பரப்பை பொறுத்து, 3,000 முதல் 15,000 ரூபாய் வரை செலவாகலாம்.

 

– நமது நிருபர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *