மெட்ரோ சுற்றுலா அட்டைகள் வரும் பிப்., 1 முதல் நிறுத்தம்
சென்னை:’மெட்ரோ சுற்றுலா அட்டைகள் புதிதாக வழங்குவது, வரும் 1ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. தற்போதுள்ள அட்டைகளில் இருப்பு தொகை உள்ள வரை, பயன்படுத்த அனுமதிக்கப்படும்’ என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்கள், மாநகர பேருந்துகளில் பயன்படுத்தும்,’சிங்கார சென்னை அட்டை’யை அனைவரும் பயன்படுத்தும் வகையில், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி வந்த சுற்றுலா அட்டைகள், இனி புதிதாக வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோவில் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் டிக்கெட்டுகளை பயன்படுத்துவதை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த வகையில், மெட்ரோவில் வழங்கப்பட்டு வந்த ஒரு நாள் சுற்றுலா அட்டை மற்றும் 30 நாட்கள் சுற்றுலா அட்டைகள், வரும் பிப்., 1ம் தேதி முதல் நிறுத்தப்படுகின்றன.
இருப்பினும், இந்த அட்டைகளில் உள்ள இருப்பு தொகை காலியாகும் வரை பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
பயணியர் தங்கள் பயண தேவைகளுக்கு, டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள், கியூ.ஆர்., குறியீடு அடிப்படையிலான டிக்கெட்டுகள், பயண டோக்கன்கள் மற்றும் சிங்கார சென்னை அட்டை உள்ளிட்டவை வாயிலாக, மெட்ரோவில் தொடர்ந்து பயணிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.