‘ஒருநாள் திருப்பதி சுற்றுலா ‘ மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
சென்னை:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், ஒருநாள் திருப்பதி சுற்றுலா உட்பட, பல்வேறு தொடர் சுற்றுலா திட்டங்கள், பருவகால சுற்றுலா திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
இதில், ‘ஒரு நாள் திருப்பதி சுற்றுலா திட்டம்’ அதிக வரவேற்பை பெற்றது. சிறப்பு தரிசன அனுமதி சீட்டின் அடிப்படையில், தினமும் 300க்கும் மேற்பட்டோர், தமிழகத்தில் இருந்து திருப்பதி சென்று, பெருமாளை வழிபட்டு வந்தனர்.
இவர்கள், சென்னையில் இருந்து தினமும் அதிகாலை 4:30 மணிக்கு இயக்கப்பட்ட திருப்பதி பேருந்தில் அழைத்து செல்லப்படுவர். அங்கு தரிசனம் முடித்து இரவு சென்னை திரும்புவர். ஒரு நபருக்கு, கட்டணமாக 2,000 முதல் 2,500 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது.
ஆனால், கடந்த நவம்பர் மாதம் முதல் இத்திட்டம் முடக்கப்பட்டுள்ளது. அதேநேரம். இந்த சேவையை மீண்டும் வழங்க, சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, சுற்றுலா சென்ற பயணியர் சிலர் கூறுகையில், ‘திருப்பதிக்கு குடும்பத்தினருடன் தனியார் வாகனத்திற்கு செல்வதில், சிக்கல் நிலவி வருகிறது. மேலும், அதிக பணமும் செலவாகும். இதனால், அரசின் ஒருநாள் திருப்பதி சுற்றுலா, மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனவே, மீண்டும் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் சிலர் கூறுகையில்,”ஒருநாள் திருப்பதி சுற்றுலா திட்டம் மீண்டும் செயல்படுத்துவது குறித்து, ஆந்திர மாநில அரசு மற்றும் தேவஸ்தான குழுவிடம் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், சிறப்பு தரிசன அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தேவஸ்தான குழு சிறப்பு தரிசன அனுமதி முறையை மீண்டும் அமல்படுத்தும் நிலையில், திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவோம்,” என்றனர்.