ஆக்கிரமிப்பால் குட்டையான குளம் மீட்டெடுக்க நங்கநல்லுார் வாசிகள் கோரிக்கை

நங்கநல்லுார், எம்.ஜி.ஆர்., சாலையில் ஏழூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. தனியார் நிர்வகித்து வரும் இக்கோவிலுக்கு அருகில் பெரிய குளம் ஒன்று இருந்தது.

அந்த குளத்தின் மூன்று பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டன. தற்போது குளம் குட்டையாக மாறியுள்ளது. தற்போது, அந்த குட்டையையும் குப்பை, ரப்பீஷ் கொட்டி மேடாக்கி முழுமையாக ஆக்கிரமிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:

ஏழுர் அம்மன் கோவில் அருகில் நீர்ப்பிடிப்பு பகுதியாக, 70 ஆண்டுகளுக்கு முன் பெரிய குளம் ஒன்று இருந்தது. நகர வளர்ச்சி காரணமாக, மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் குளத்தின் பாதிப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் குட்டையாக மாற்றப்பட்டது.

இருப்பதையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2016ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், எந்த துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஆக்கிரமிப்பு கும்பலுக்கு சாதகமானது.

விரைவில் அந்த இடத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து, தங்களுக்கு சொந்தமானது என, அதிகாரப்பூர்வமாக ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும். பல ஆண்டுகளுக்கு முன் மழைநீர் சேகரித்த குளம், விரைவில் முழுமையாக மாயமாகும் முன் சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர் மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

— -நமது நிருபர்- –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *