சாலை விபத்தில் திமுக பிரமுகரின் மகன் பரிதாப பலி
ஆலந்தூர், ஜன.26: பரங்கிமலை கரையார் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து. இவர் வியாபாரிகள் சங்கத் தலைவராகவும் திமுக மாவட்ட பிரதிநிதியாகவும் உள்ளார். இவரது மூத்த மகன் கதிரவன் (34). கடந்த 15ம்தேதி நள்ளிரவு மணப்பாக்கத்தில் இருந்து பரங்கிமலை நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட கதிரவன் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த கதிரவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.