கும்பமேளாவிற்கு செல்லும் ஆந்திர வாழை தட்டுப்பாடு காரணமாக விலை அதிகரிப்பு
சென்னை, ஆந்திராவில் இருந்து கும்பமேளாவிற்கு வாழைப்பழங்கள் அதிகம் எடுத்து செல்வதால், தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது.
துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் உட்பட பல மாவட்டங்களில், பூவன், ஏலக்கி, கற்பூரம், ரஸ்தாலி, செவ்வாழை, மலை வாழை உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்கிருந்து, பல்வேறு மாவட்டங்களின் தேவைக்காக, தினமும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. உற்பத்தி போதிய அளவில் இல்லாததால், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் பல பகுதிகளில் இருந்து, சென்னை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வாழைப்பழங்கள் வரத்து இருக்கும்.
வடகிழக்கு பருவமழைக்கு பின், தமிழகத்தில் வாழைப்பழ உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வரவேண்டிய வாழைப்பழங்கள் உ.பி., மாநிலத்தில் நடக்கும் கும்பமேளா விழா விற்பனைக்காக, அதிகம் எடுத்து செல்லப்படுகின்றன.
இதனால், தமிழகத்தில் வாழைப்பழ தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது.
சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் ஏற்கனேவே, கிலோ 30, 40 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைப்பழம், 80 ரூபாய்; 40, 50 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாலி, கற்பூரம் ஆகியவை, 70 – 90 ரூபாயக்கும் விற்கப்படுகிறது.
ஏற்கனவே, 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஏலக்கி, 80 ரூபாய்; 70, 80 ரூபாய்க்கு விற்ற செவ்வாழை 130 ரூபாய்; 100 ரூபாய்க்கு விற்ற மலை வாழை பழங்கள், 160 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
வாழைப்பழங்கள் விலை உயர்வு, நுகர்வோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.