கொசு உற்பத்தியில் சென்னை முதலிடம் அல்லல்படும் மக்கள் ௶ ‘சான்று’
சென்னை, சென்னையில் அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், கேப்டன் – காட்டன் கால்வாய், அரும்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா, வீராங்கல் ஓடை, புழல் ஏரி உபரிநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு நீர்வழித்தடங்கள் உள்ளன. மழைக்காலங்களில் மட்டும் இவற்றில் வெள்ள நீரோட்டம் இருக்கும். அதன்பின், சென்னை நகரின் கழிவுநீரை வெளியேற்றும் கட்டமைப்புகளாக இந்த நீர்வழித்தடங்கள் மாறிவிடும்.
அதன்படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரை, இந்த நீர்வழித்தடங்களில் வெள்ள நீரோட்டம் இருந்தது. பருவமழை ஓய்ந்துள்ள நிலையில், மெல்ல கழிவுநீர் கலந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், நீர்வழித்தடங்களில் பிளாஸ்டிக் கழிவு, தெர்மாகோல், பழைய துணிகளால் அடைப்பு ஏற்பட்டு நீரோட்டம் தடைபட்டுள்ளது.
இதனால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும், பரவலான மழை உள்ளிட்ட காலநிலையும் அவற்றிற்கு சாதகமாகி உள்ளது. இதனால், நீர்வழித்தட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் கொசுக்கள் படையெடுத்து வருகின்றன.இதனால், சென்னையில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
‘கொசு ஒழிப்பு நடவடிக்கையில் மாநகராட்சி போதிய கவனம் செலுத்த வில்லை; கொசு உற்பத்திக்கான போட்டி வைத்தால் சென்னை மாநகருக்கு தான் முதல் இடம் கிடைக்கும்’ என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், ‘கொசு உற்பத்தியை குறைக்க மருந்து தெளிப்பு உள்ளிட்ட பணிகளை, மீண்டும் கையில் எடுக்கவேண்டும். வாங்கிய ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல், பல சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீரை வெளியேற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.