பெண் போலீசின் கழுத்தை அறுத்த மாஞ்சா: ஒருவர் கைது
புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரம்யா, 26. இவர், அமைந்தகரை பெண் போலீசாக பணிபுரிகிறார். இருநாட்களுக்கு முன், நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக, அண்ணா நகரை நோக்கி, ரம்யா இருசக்கர வாகனத்தில் சென்றார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அண்ணா வளைவு மேம்பாலத்தில் ஏறும்போது, எதிர்பாராத விதமாக கழுத்தில் மாஞ்சா நுால் அறுத்து காயம் ஏற்பட்டது.
பின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்து, அமைந்தகரையில் மாஞ்சா நுாலை தயாரித்து விற்ற, பி.பி., கார்டன் பகுதியைச் சேர்ந்த பஞ்சாட்சரம், 42, என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து, ஒரு மஞ்சா நுால் ரோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தன்று காற்றாடி பறக்க விட்ட நபரை தேடி வருகின்றனர்.