குழந்தையை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் 2 பேருக்கு ஆயுள் தண்டனை: சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, ஜன.23: செனாய் நகரை சேர்ந்த தம்பதியரின் 3 வயது குழந்தை ஒரு பள்ளியில் படித்து வந்தார். 2019 ஜூலை 18ம் தேதி பள்ளி முடிந்து வேனில் வந்து இறங்கிய குழந்தையை, தம்பதியர் வீட்டில் வேலை பார்த்து வந்த வேலைக்கார பெண் அம்பிகா (24), நண்பர் கலிமுல்லாஷேட் (30) காரில் கடத்தினர். இதை தொடர்ந்து குழந்தையின் பெற்றோரிடம் ₹60 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, குழந்தையை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை மீட்ட போலீசார், அம்பிகா, கலிமுல்லாஷேட் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அம்பிகா, கலிமுல்லாஷேட் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் ₹4,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.