உணவு பொருள் வழங்கல் துறை அறிவிப்பு : சென்னையில் வரும் 25ம் தேதி குடும்ப அட்டைதாரர்கள் குறைதீர் முகாம்
சென்னை, ஜன.23: பொதுவிநியோக திட்டத்தின் பயன்களை பொதுமக்கள் அறியும் வகையில் வரும் 25ம் தேதி சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பொது விநியோக திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் 25ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.