கிளாம்பாக்கம் பஸ் நிலைய வசதி அறிய புதிய செயலி துவக்கம்
சென்னை, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் தொடர்பான அனைத்து விபரங்களையும், பொதுமக்கள் மொபைல் போன் வாயிலாக அறிய புதிய செயலி துவங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., வெளியிட்ட அறிவிப்பு:
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விபரங்கள் அறிய புதிய செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், புதிய செயலியை, சி.எம்.டி.ஏ., தலைவரும், அமைச்சருமான சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார்.
‘கூகுள் பிளே ஸ்டோர் ஆப்’பில் கே.சி.பி.டி., என்று டைப் செய்து, புதிய செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்ல மக்களுக்கு, இந்த செயலி நல்ல வழிகாட்டியாக அமையும்.
அரசு விரைவு போக்குவரத்து கழகம், அரசு போக்குவரத்து கழகம், மாநகர் போக்குவரத்து கழகம் ஆகியவற்றின் பேருந்துகள் வந்து செல்லும் நேரம், நிற்கும் நடை மேடை விபரங்கள், அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்த தகவல்களை இதில் பெறலாம்.
அவசர உதவி மற்றும் புகார் தெரிவிப்பது உள்ளிட்ட வசதிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம் மொழிகளில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.