கூவத்தில் கழிவுநீரை கொட்டிய லாரி கருப்பு பட்டியலில் சேர்ப்பு
அண்ணா நகர், முகப்பேர் அருகே புறவழிச்சாலையில், மதுரவாயல் பாலத்தின்கீழ் செல்லும் கூவத்தில், சட்டவிரோதமாக கழிவுநீர் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை கண்காணித்தபோது, நெற்குன்றத்தை சேர்ந்த தமிழழகன் என்பவருக்கு சொந்தமான கழிவுநீர் லாரி, கடந்தாண்டு மார்ச் 23ல், பகல் 11:30 மணிக்கு, கழிவுநீர் கொட்டியது உறுதியானது.
இதையடுத்து, அக்., 10ல், லாரியின் பதிவு சான்றை ரத்து செய்ய, போக்குவரத்து கமிஷனருக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்தது.
இதுகுறித்து, அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலர் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட லாரியின் அனுமதி சீட்டான, ‘பர்மிட்’ ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது தெரிந்தது.
இது தொடர்பாக, பல முறை சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு, ஆர்.டி.ஓ., சார்பில் நோட்டீஸ் அனுப்பியும் அலட்சியமாக இருந்துள்ளார்.
இதையடுத்து, மோட்டார் வாகன சட்டப்படி, வாகனத்தின் பதிவு சான்றை ரத்து செய்து, அண்ணா நகர் ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.
மேலும், அந்த வாகனத்திற்கு, புதிய அனுமதி சீட்டை பெறுதல் உள்ளிட்ட எவ்வித பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என, வாகனத்தின் பதிவு எண் இணையதளத்தில், கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.