ராகுல் மீது அசாமில் வழக்கு சென்னையில் காங்., போராட்டம்
சென்னை, அசாம் மாநிலம், காவல் நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது அவதுாறு வழக்கு பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதை கண்டித்து, சென்னையில் நேற்று, காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு பேசியதாவது:
கடந்த 1947ல் சுதந்திரம் பெறவில்லை என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத் கூறிய கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
காந்தி, காமராஜர் தொண்டர்கள் நடத்திய போராட்டத்தின் வழியாக, சுதந்திரத்தை பெறவில்லை என, கருத்து தெரிவித்ததை கண்டிக்கிறோம்.
அப்படி சொல்கிற சக்தி எந்த கொம்பனுக்கும் கிடையாது. நாம் சுதந்திர இந்தியாவில் இருக்கிறோம். அந்த சுதந்திரத்தின் வழியாகத்தான் மோடி பிரதமராக இருக்கிறார்.
முதல்வர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். இந்த ஜனநாயகத்தை கொடுத்தது, பாதுகாத்தது காங்கிரஸ் கட்சி.
மக்களுக்கு எதிரான கொள்கைகளை யார் சொன்னாலும், அதை எதிர்க்கிற மிக சிறந்த பண்பு ராகுலுக்கு உள்ளது.
மக்களுக்காக போராடுபவர் ராகுல். அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை விலக்கும் வரை காங்கிரசாரின் போராட்டம் தொடரும். சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பாடுபட்ட காங்கிரஸ் கட்சி, பா.ஜ.,வினருக்கு பயந்து ஓடிவிடாது.
இவ்வாறு அவர் பேசினார்.