‘அம்மா’ உணவகத்திற்கு காஸ் சிலிண்டர் ரூ.18 கோடி நிலுவை வைத்த மாநகராட்சி
சென்னை, அம்மா உணவகத்திற்கு மளிகை, காஸ் சிலிண்டர்வழங்கியதற்காக, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்துக்கு, சென்னை மாநகராட்சி, 18 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. இதனால், சங்கத்திற்குஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை முழுதும், 392 அம்மா உணவகங்களை, சென்னை மாநகராட்சி நடத்தி வருகிறது. அங்கு, குறைந்த விலையில் மூன்று வேலையும் உணவு வகைகள் விற்கப்படுகின்றன.
உணவகத்துக்கு தேவைப்படும் காய்கறி, மளிகை, சமையல் காஸ் சிலிண்டர் ஆகியவற்றை, டி.யு.சி.எஸ்., எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் வினியோகம் செய்கிறது.
இதற்காக சங்கத்திற்கு மாதம் சராசரியாக, 5 கோடி ரூபாய் வரை வழங்க வேண்டும். இந்த பணம், குறித்த காலத்தில் தருவதில்லை. இதுவரை, 18 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. இதனால், செலவுகளை சமாளிக்க முடியாமல், கூட்டுறவு சங்கத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூறியதாவது:
இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து தினமும், 30 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி, சமையல் காஸ் சிலிண்டர்கள் வாங்கப்படுகின்றன. அவை, அம்மா உணவகத்துக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
ஆனால், சென்னை மாநகராட்சி, பணத்தை வழங்காமல் தாமதம் செய்கிறது. இதனால், காய்கறி, மளிகை கொள்முதல் செய்த வியாபாரிகளுக்கு சரியான நேரத்தில் பணம் வழங்க முடிவதில்லை.
ஊழியர்கள் சம்பளம், ஓய்வுபெறுவோர் பணப்பயன் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க முடிவதில்லை.
எனவே, அம்மா உணவகத்திற்கு வழங்கப்படும் பொருட்களுக்கான பணத்தை நிலுவையின்றி மாதம்தோறும் வழங்குவதற்கான ஏற்பாட்டை, மாநகராட்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.