தென் சென்னையில் வெள்ள பாதிப்பு தடுக்க திட்டம் : பெருங்குடி, சோழிங்கநல்லுாரில் வடிகால் அமைக்க… ரூ.696 கோடி!

பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், 696 கோடி ரூபாய் மதிப்பில், 141 கி.மீ., நீளத்திற்கு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது. கோவளம் ஒருங்கிணைந்த வடிகால் திட்டத்தின் கீழ், மூன்றாம் கட்ட பணியாக துவங்கப்பட்டு, 2026க்குள் முடிக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் மழை, வெள்ளம் பாதிப்புகளை தடுக்கும் வகையில், அடையாறு, கூவம், கோவளம், கொசஸ்தலையாறு ஆகியவற்றை வடிநிலை பகுதிகளாக கொண்டு, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், 2015 வெள்ள பாதிப்புக்கு பின், கூவம், அடையாறு வடிநிலைப் பகுதிகளில், 1,101.43 கோடி ரூபாய் மதிப்பில், 326 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து, பல்வேறு இடங்களில் சேதமடைந்த மற்றும் தேவையின் அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகர் முழுதும், 3,050 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் கட்டமைப்பு உள்ளது.

ஆனாலும், விரிவாக்கம் செய்யப்பட்ட வடசென்னை, தென் சென்னை பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு மேம்படுத்தப்படாமல் இருந்தது.

இதை தொடர்ந்து, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், 3,220 கோடி ரூபாய் மதிப்பில், 789 கி.மீ., நீளத்திற்கு, மாதவரம், திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில், மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை, 500 கி.மீ., நீளத்திற்கு பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள், இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதேபோல், ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவிடன், கோவளம் வடிநிலத்தில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், 1,714 கோடி மதிப்பில், 160.83 கி.மீ., நீளத்திற்கு நடைபெறுகிறது. இதில், 20 கி.மீ., வரை பணிகள் முடிந்துள்ளன.

அதேநேரம், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு காரணமாக, கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையிலான கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட இருந்த மழைநீர் வடிகால் பணிகள் கைவிடப்பட்டு உள்ளன.

இந்நிலையில், மற்ற சதுப்பு நிலப்பகுதிகள் போன்ற இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்க, ஜெர்மன் வளர்ச்சி வங்கி, 696 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு தற்போது வழங்கியுள்ளது.

அந்நிதி வாயிலாக, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், 141.1 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

கோவளம் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள், எம் 1, எம் 2, எம் 3 ஆகிய பிரிவுகளின் கீழ் பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது, எம் 3 பிரிவில், மூன்றாம் கட்டமாக, 696 கோடி ரூபாய் மதிப்பில் வடிகால் பணிகள் துவங்கப்படும். இந்த மழைநீர் வடிகால் பெரும்பாலும், இடத்திற்கு ஏற்ப, அகலம் மாறுபடும்.

குறிப்பாக, 7 செ.மீ., முதல் 10 செ.மீ., வரையிலான மழைநீர் உள்வாங்கும் வகையில், சாலையின் அகலத்திற்கு ஏற்ப, வடிகால் கட்டமைப்பு மாறுபடும்.

அதேநேரம், பெரும்பாலான இடங்களில், 3×3 என்ற அடிப்படையில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு அமைக்கப்படும்.

அந்த வகையில், செம்மஞ்சேரி, பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன் பெறுவர். இப்பணிகள் விரைவில் துவங்கப்பட்டு, 2026க்குள் முடிக்கப்படும்.

தொடர்ந்து, விடுபட்டுள்ள மற்றும் இணைப்பு இல்லாத இடங்களிலும் பணிகள் துவங்கப்படும். இப்பணிகள் முடிவடைந்தால், பள்ளிக்கரணை போன்ற இடங்களில், வெள்ள பாதிப்பு தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *