திருவான்மியூர் பகுதியில் போதை மாத்திரை விற்ற மணிப்பூர் பெண் கைது
துரைப்பாக்கம், ஜன.22: திருவான்மியூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக, திருவான்மியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான தனிப்படை போலீசார், திருவான்மியூர் பகுதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பையுடன் சுற்றித்திரிந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். சந்தேகமடைந்த தனிப்படை போலீசார், அப்பெண் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த வுங்கிளியான் சிங் (30) என்பதும், சென்னை தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, கடந்த 4 மாதங்களாக ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை ஆர்டர் செய்து, போதைக்காக விற்பனை செய்ததும், ஒரு மாத்திரையை 10 ரூபாய்க்கு வாங்கி, 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 8100 மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.