போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சென்னை, ஜன. 22: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரின் மகன் முருகன் (39). இவர் இதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை 2019ம் ஆண்டு தனது அண்ணனுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, சிறுமியை முருகன் தனது வீட்டிற்க்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப் படையில், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி நசீமாபானு குற்றவாளியான முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்ததுடன் மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.3 லட்சம் தமிழக அரசு வழங்க பரிந்துரை செய்து தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து, குற்றவாளி முருகனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *