தூய்மை பணியாளரிடம் ரூ.1500 லஞ்சம் மேற்பார்வையாளருக்கு 5 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஜன.22: சென்னை மாநகராட்சி 2வது மண்டலத்தில், 28வது வார்டில் துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் சிட்டிபாபு. இவர், தூய்மை பணி ஆய்வாளர் கணேசனின் மேற்பார்வையில் பணியாற்றி வந்தார். வருகை பதிவேட்டில் பணிக்கு வரவில்லை என பதிவிடாமல் இருக்கவும், கூடுதல் பணி வழங்காமல் இருக்கவும் சிட்டிபாபுவிடம், கணேசன் ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிட்டிபாபு புகார் அளித்தார்.

இதையடுத்து, கடந்த 2010 ஜனவரி 20ம் தேதி லஞ்சப் பணத்தை சிட்டிபாபு கொடுத்த போது, கணேசனை கையும், களவுமாக போலீசார் பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கணேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *