கவின் கலை கல்லுாரிக்கு ரூ.21 கோடியில் கட்டடங்கள்
சென்னை, ”சென்னை, கவின் கலை கல்லுாரி வளாகத்தில், 21 கோடி ரூபாயில் மூன்று புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளன,” என, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
அவர் நேற்று சென்னை, எழும்பூரில் உள்ள, கவின்கலைக் கல்லுாரியில் நடக்கும் புனரமைப்பு பணிகளை, ஆய்வு செய்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி:
கவின் கலைக் கல்லுாரி வளாகத்தில் உள்ள, இரண்டு பழைய கட்டடங்களின் புனரமைப்பு பணிகள், மார்ச் மாதத்துக்குள் முடியும். மேலும், 53,300 சதுர அடி பரப்பளவில், 21 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று புதிய கட்டடங்கள் கட்டும் பணி, அடுத்த மாதம் துவங்கும். அதேபோல், சென்னை வள்ளுவர் கோட்டம் பராமரிப்பு பணிகள் மார்ச் மாதத்துக்குள்ளும், ராஜாஜி ஹால் புனரமைப்பு பணிகள் மே மாதத்துக்குள்ளும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த ஆண்டு, நெல்லை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு, அனைத்து மாவட்டங்களிலும் நடத்தும் திட்டம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.