ரேஷன் கடையில் தீ விபத்து பொங்கல் தொகுப்பு நாசம்
ரேஷன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், அரிசி மூட்டைகள் மற்றும் பொங்கல் தொகுப்புகள் எரிந்து நாசமாயின.
திருவொற்றியூர் மேற்கு, அண்ணாமலை நகர், முதல் தெருவில், நாம்கோ சார்பில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம், உணவு இடைவேளையின் போது, கடை அடைக்கப்பட்டு இருந்தது.
அப்போது, கடையில் இருந்து கரும்புகை வெளியாகியது. திருவொற்றியூர், எண்ணுார் தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்த வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர்.
இருப்பினும், கடையில் இருந்த, 50க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள், சர்க்கரை மூட்டைகள், ஏராளமான பொங்கல் பரிசு தொகுப்பு, கரும்பு உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாயின.
சம்பவம் குறித்து, சாத்தாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.