7-ம் ஆண்டு நினைவு தினம் – நினைவிடத்தில் குடும்பத்தினர் மரியாதை

முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உலக புகழ் பெற்ற ராமேசுவரத்தில் பிறந்தார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பாதுகாப்பு துறையில் பணியாற்றி அணுகுண்டு சோதனை, செயற்கைகோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குவதில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.

மாணவர்களின் எழுச்சி நாயகனாகவும், இளைஞர்களின் கனவு நாயகனாகவும், இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதை குறிக்கோளாக கொண்டு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தினார்.

அந்த வகையில் 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடும்போது அப்துல்கலாமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரது நினைவைப் போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் ராமேஸ்வரம் பேக்கரும்பில் நினைவிடம் அமைத்தது. அந்த நினைவிடத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து வாசகங்கள் அமைக்கப்பட்டும், அவர் பயன்படுத்திய உடைமைகளும் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் அப்துல் கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று கலாமின் குடும்பத்தினர் ஜெய்னுலாபுதீன், நசீமா மறைக்காயர், பேரன்கள் ஷேக் தாவுது, ஷேக் சலீம் உள்ளிட்ட குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக ஆலிம்சா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பொதுமக்களும் மாணவ-மாணவிகளும் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி கலாமின் லட்சியப்படி செயல்படுவோம் என உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *