மேம்படுத்தப்படாத பட்டாபிராம் ரயில் நிலையம் அடிப்படை வசதிகளுக்கே அல்லாடும் பயணியர்

ஆவடி, ஆவடி அடுத்த பட்டாபிராம் ரயில் நிலையம், 60 ஆண்டு பழமை வாய்ந்தது. 1 கி.மீ., சுற்றளவுள்ள இந்த ரயில் நிலையத்தை, தினமும் 1.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்

மாதந்தோறும், 25 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. வண்டலுார் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை, தமிழகத்தின் மூன்றாவது ‘டைடல் பார்க்’ உட்பட, நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் பட்டாபிராம் பகுதியில், ரயில் நிலையம் மட்டும் அடிப்படை வசதிகளின்றி குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

பட்டாபிராம் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படாமல், ‘டி’ கிரேடு ரயில் நிலையமாகவே தொடர்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நிலைய அதிகாரிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

பட்டாபிராம் ரயில் நிலையத்தில், மூன்று நடைமேடைகள், மூன்று இருப்பு பாதைகள், இரண்டு விரைவு பாதைகள் உள்ளன.

அதில், மூன்றாவது நடைமேடையான, பட்டாபிராம் ‘சைடிங்’கில் நிழற்குடை, மின்விளக்கு, உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இருந்தது.

கடந்த ஆண்டு, நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, நிழற்குடைகள், மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், சில மாதங்களாக, பட்டாபிராம் ‘சைடிங்’ பகுதி, போதிய பராமரிப்பு இல்லாமல், செடிகள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. அதனால், அப்பகுதி மதுப்பிரியர்களின் புகலிடமாக உள்ளது.

இதனால், இரவு நேரங்களில், ரயிலில் இருந்து இறங்கி நடந்து செல்லும் பயணியர், பெரும் பீதியில் செல்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட முன்பதிவுமையம், இன்று வரை திறக்கப்படாமல், திறந்தவெளி கழிப்பறையாக மாறியுள்ளது.பயணச்சீட்டு வழங்கும்கவுன்டர் அருகே, கொரோனா காலத்தில் கட்டப்பட்ட பொது கழிப்பறையும், மூன்று ஆண்டுகளாக திறக்கப்படவில்லை.

எனவே, சம்பந்தப்பட்டரயில்வே நிர்வாகம், ‘சைடிங்’ பகுதியில் சூழ்ந்துள்ள செடி – கொடிகள், மரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றி, அங்கு வாகன நிறுத்தம் மற்றும் ரயில்வே பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

பட்டாபிராம் வடக்கு பகுதியை சீரமைத்து, ரயில்வே கல்யாண மண்டபம், ரயில்வே பார்க் உள்ளிட்டவை கட்டினால், ரயில் நிலையத்திற்கு கூடுதலாக வருமானம் கிடைக்கும். மேலும், விரைவு ரயில்கள் நின்று செல்வதற்கு புதிதாக நடைமேடை அமைத்தால், பயணியருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

– சடகோபன், சமூக ஆர்வலர், பட்டாபிராம்.

 

கிடப்பில் சுரங்கப்பாதை

பட்டாபிராம் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் விதமாக, ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.இன்று வரை அந்த பணிகள் கிடப்பில் உள்ளன. சுரங்கப்பாதை அமைக்கும் நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவசர ஊர்திகள் எளிதில் சென்று வர பயனுள்ளதாக இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *