கூவத்தில் கொட்டப்படும் குப்பை கரையோரத்தில் வசிப்போர் அட்டூழியம்
அமைந்தகரை, கூவத்தின் கரையோரத்தில் வசிக்கும் வீடுகளின் சேகரமாகும் குப்பைகளை, கூவம் ஆற்றில் வீசுவதால் சீர்கேடு நிலவுகிறது.
அண்ணா நகர் மண்டலம், அமைந்தகரை – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கூவம் ஆறு செல்கிறது. இதன் கரையோரத்தில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன.
இப்பகுதியில் வசிப்போர், தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பையை முறையாக அகற்றாமல், கூவம் கரையோரத்தில் துாக்கி வீசுகின்றனர். இதனால், கூவம் கரையோரம் முழுவதும், குப்பையாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கூவம் ஆற்றை, சம்பந்தப்பட்ட துறையினர் முறையாக பராமரிப்பது கிடையாது. குறிப்பாக, அமைந்தகரை காவல் நிலையம் அருகில் உள்ள கூவம் கரையோரத்தில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.
அதேபோல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கூவத்தில், குப்பை குவிந்து கிடக்கிறது. கரையோரத்தில் போதிய தடுப்பு நடவடிக்கை இல்லாததால், சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.
குப்பையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்