திருநின்றவூர் நகராட்சி குக்கிராமங்களை விட படுமோசம்!
திருநின்றவூர், திருநின்றவூர் பேரூராட்சி கடந்த 2021 டிசம்பர் மாதம் இரண்டாம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு தி.மு.க.,- – 15; அ.தி.மு.க., — 3; பகுஜன் சமாஜ்- – 3; காங்கிரஸ் — 2; ம.தி.மு.க — 1; வி.சி.க., — 1 மற்றும் சுயேட்சை — 2 என, மொத்தம் 27 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில், தி.மு.க.,வைச் சேர்ந்த உஷா ராணி, நகர்மன்ற தலைவராக உள்ளார்.
திருநின்றவூர் நகராட்சியில், 103 கி.மீ., துாரத்திற்கு சாலை உள்ளது. இங்கு, 810 தெருக்களில் 52,040 பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், 50 சதவீதத்திற்கு மேற்பட்ட தெருக்களில், இன்னும் சாலை வசதி ஏற்படுத்தவில்லை. அவை எப்போது போடப்படும் என தெரியவில்லை.
காரணம் திருநின்றவூர், நகராட்சியாக தரம் உயர்ந்து இரண்டு ஆண்டுகளாகியும், சாலை, குடிநீர், சாக்கடை, வடிகால் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. பல இடங்களில், குறைந்தபட்சம் சாலை வசதி கூட இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். தெருக்களில் தேங்கும் கழிவு நீரால் மண் சாலை மேலும் சேதமடைந்து விபத்து பகுதிகளாக மாறுகின்றன.
பாபுஜி நகர்
திருநின்றவூர் நகராட்சி, 19வது வார்டு, பாபுஜி நகர் 4, 5, 6 மற்றும் ஏழாவது தெருவில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக சாலை, பாதாள சாக்கடை மற்றும் வடிகால் வசதி இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி, ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. கழிவு நீர் தொடர்ந்து தேங்கி நிற்பதால், எந்நேரமும் கொசு உற்பத்தியாகி நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், தணிகைவேல் நகரிலும் இது வரை சாலை வசதி ஏற்படுத்தவில்லை
அன்னை இந்திரா நகர்
திருநின்றவூர் நகராட்சி, 21, 27வது வார்டு அன்னை இந்திரா நகரில் 2,000 வீடுகள் உள்ளன. இங்கு 17 பிரதான சாலைகளில், 52 குறுக்கு தெருக்கள் உள்ளன. தவிர, எல்.ஐ.சி., நகர், ஸ்ரீனிவாசா நகர், திருவேங்கடம் நகர், அருணாச்சலம் நகர், ஹிம்மத் நகர், சரவணா அடுக்ககம் மற்றும் சரஸ்வதி நகரில் 10 பிரதான சாலைகளில் 25 குறுக்கு தெருக்கள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளாக உள்ள இங்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, சாலை வசதி மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தவில்லை. மழை காலத்தில், அன்னை இந்திரா நகர் குட்டி தீவு போல் மாறுவது தொடர்கதையாகி வருகிறது.
முருகேசன் நகர்
திருநின்றவூர் நகராட்சி, ஏழாவது வார்டில் முருகேசன் நகர் 2வது குறுக்கு தெரு உள்ளது. 150 மீட்டர் நீளம்; 20 அடி அகலம் கொண்ட இந்த தெருவில் 25 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த 2004ல் சிமென்ட் சாலை போடப்பட்டு உள்ளது. அதன் பின் 20 ஆண்டுகளாக சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
மழைக்காலத்தில், நத்தமேடு ஊராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் வெள்ளம், இங்குள்ள தெருவில் 2 அடிக்கு தேங்கி நிற்பது வாடிக்கை.
அதிகாரி க ளுக்கு அழுத்தம்
திருநின்றவூர் நகராட்சியை பொறுத்தவரை, அரசியல் அழுத்தம் காரணமாக அதிகாரிகள் நிலைத்து நிற்பதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், நகராட்சி கமிஷனர் உட்பட பல அதிகாரிகள், பகுதி நேரமாக தான் பணிபுரிந்து வந்தனர். அவர்களில் சிலர் விடுப்பில் சென்று, அப்படியே வேறு இடங்களுக்கு இடமாற்றம் வாங்கி செல்வது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக திருநின்றவூர் நகராட்சியில், பணிபுரிவதை அதிகாரிகள் விரும்புவதில்லை.
அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவதால், நகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் தடைபட்டு, பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்படுகின்றன.
கூட்டம் பரம ரகசியம்
அதேபோல், வார்டு பணிகளை செய்வதில் பாராபட்சம் காட்டுவதால், நகர்மன்ற தலைவர் செயல்பாடுகள், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரை கூட அதிருப்தி அடைய செய்துள்ளது. மாதந்தோறும் நடக்கும் நகர்மன்ற கூட்டமும், முறையாக நடத்துவதில்லை. அதில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர்களிடம் ஆலோசிக்காமல் தலைவர் தன்னிசையாக செயல்படுத்துவதாக வார்டு உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நகர்மன்ற கூட்டம் நடக்கும்போது, பத்திரிகையாளர்களை அனுமதிக்காமல், தொடர்ந்து ரகசிய கூட்டமாக நடந்து வருகிறது. இதனால், கூட்டத்தில் விவாதிக்கப்படும் பிரச்னை குறித்து வெளியே தெரிவதில்லை. இது குறித்து நம் நாளிதழில் பலமுறை செய்தி வெளியாகியும், நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், திருநின்றவூர், ஆவடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. இதனால், சாலை மற்றும் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். மேலும், ஆளுங்கட்சி தலைவர் தலையீடு இல்லாமல் நகராட்சி
வளர்ச்சி அடைவதோடு, நிர்வாக சிக்கல் தீர்ந்து விடும் என, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விரைவில் பணிகள்
தற்போது, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 5 கோடி ரூபாய் மதிப்பில், 46 சாலைகள் போடும் பணி நடந்து வருகிறது. தவிர, அன்னை இந்திரா நகரில் 2 கோடி ரூபாய் மதிப்பில் 16 சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளோம். மேலும், 20 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைப்பதற்கு, முதற்கட்ட பணிகள் நடைபெற உள்ளது. இன்னும் 50 சதவீத பகுதிகளில் சாலை பணிகள் மேற்கொள்ள வேண்டும். அவை விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
– அதிகாரிகள்,
திருநின்றவூர்.
அ.தி.மு.க., ஆட்சியில் அதிக நிதி பெற்று தந்தோம். தேவையான இடங்களில் சாலை அமைக்கப்பட்டது. தற்போது, திருநின்றவூர் நகராட்சியை பொறுத்தவரை, மக்கள் நலத்திட்ட பணிகள் எதுவும் நடக்கவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர் கீர்த்தனாவும், புகார் அளித்தால் பார்க்கலாம் என்று கூறுகிறார். தவிர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க., வார்டு உறுப்பினர்களின் பகுதிகளில் ஒரு செங்கல் கூட நடப்படவில்லை; அனைத்து பகுதிகளும் புறக்கணிக்கப்படுகின்றன.
– முன்னாள் வார்டு உறுப்பினர், அ.தி.மு.க.,
சுட்டி காட்டிய ‘தினமலர்’
திருநின்றவூரில், சாலை பிரச்னை, நிரந்தர கமிஷனர் மற்றும் நிரந்தர அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என, பலமுறை நம் நாளிதழ் சுட்டிக்காட்டியது. குறிப்பாக, நகராட்சியாக மாறி ஓராண்டுக்கு மேலாக பொறுப்பு கமிஷனர் மற்றும் அதிகாரிகள் பணிபுரிந்து வந்தனர். இதன் எதிரொலியாக, கடந்த சில மாதங்களுக்கு முன், நிரந்தர கமிஷனர் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.