பல்லாவரம்- — திருநீர்மலை சாலையை 4 வழிப்பாதையாக மாற்ற கோரிக்கை
திருநீர்மலை:பல்லாவரம்- திருநீர்மலை சாலையில், தினசரி ஏற்பட்டு வரும் நெரிசலை கருத்தில் கொண்டு, நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லாவரத்தில், ஜி.எஸ்.டி., சாலையில் பான்ட்ஸ் சிக்னலில் இருந்து பிரிந்து செல்கிறது, திருநீர்மலை சாலை. திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, வெளிவட்ட சாலை, குன்றத்துார் பகுதிகளை இணைப்பதால், இதன் வழியாக, தினசரி, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதை ஒட்டி, பிரசித்திப் பெற்ற திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
டிப்பர், ஜல்லி லாரிகள், தொழிற்பேட்டைக்கு மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் என, ஏராளமான வாகனங்கள் செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, ‛பீக் அவர்’ நேரத்தில், பான்ட்ஸ் சிக்னல், எம்.ஜி.ஆர்.,சிலை, நாகல்கேணி, லட்சுமி புரம் ஆகிய இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது தொடர்கிறது. இதனால், தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் ஊழியர்கள், மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மற்றொரு புறம், வாகனம் ஒன்று பழுதாகி நின்றால், கட்டுக் கடங்காத அளவிற்கு நெரிசலும் ஏற்படுகிறது. அதனால், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, இச்சாலையை நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்ய, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.