புழல் ஏரியை சுற்றிய 27 கிராமங்கள் நீர்பிடிப்பு பகுதியா? சி.எம். டி.ஏ., கோரிக்கையை ஏற்க மறுத்தது உச்சநீதிமன்றம்
சென்னை:புழல் ஏரியை சுற்றி, 27 கிராமங்களுக்கு உட்பட்ட, 34,000 ஏக்கர் நிலங்களை நீர்ப்பிடிப்பு பகுதியாக அறிவித்ததை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், புழல் ஏரி பிரதான ஆதாரமாக உள்ளது. இந்த ஏரிக்கு நீர் வரும் வழியில் உள்ள, 27 கிராமங்களுக்கு உட்பட்ட, 34,000 ஏக்கர் நில பரப்பை நீர்ப்பிடிப்பு பகுதியாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., அறிவித்தது.
இதன் காரணமாக, இந்த கிராமங்களில் புதிய மனைப் பிரிவுகள், கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சி.எம்.டி.ஏ.,வின் முதலாவது முழுமை திட்டத்தில் துவங்கி, இரண்டாவது முழுமை திட்டத்திலும் இந்த தடை தொடர்கிறது. ஆனால், எவ்வித அனுமதியும் இன்றி, இப்பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்கள், நில வகைபாடு மாற்றக்கோரி தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றன. கடந்த, 2017ல் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் கோரிக்கையை, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித் துறை நிராகரித்தது.
உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இது தொடர்பாக, தனியார் நிறுவனங்கள் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2024 மே மாதம் பிறப்பித்த தீர்ப்பு:
புழல் ஏரியின் சுற்றுப்புற பகுதி நிலங்களை நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைபடுத்தியதை, மறு ஆய்வு செய்வதாகவும், இதற்காக வல்லுனர் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது.
இரண்டாவது முழுமை திட்டப்படி, 34,000 ஏக்கர் நிலங்களை நீர்ப்பிடிப்பு பகுதியாக அறிவித்தது சட்டவிரோதம். இதற்கேற்ப முழுமை திட்டத்தில், திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டது.
மேல்முறையீடு
இந்த தீர்ப்புக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில், சி.எம்.டி.ஏ., மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
இதில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
இதில் சம்பந்தப்பட்ட தரப்பினர், ஆறு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கில் அடுத்த முடிவு எடுக்கப்படும் வரை, எவ்வித பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. தற்போதைய நிலை தொடர வேண்டும். இந்த வழக்கு மார்ச், 4க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: நீர்ப்பிடிப்பு பகுதி என்று வகைபடுத்தியதை மறு ஆய்வு செய்வதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.எம்.டி.ஏ., தெரிவித்தது. அவ்வாறு செய்யாமல், தீர்ப்புக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. சி.எம்.டி.ஏ., கோரிக்கைப்படி, இதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததோடு, ‘தற்போதைய நிலை தொடரும்’ என்று தெரிவித்துள்ளது. இது, புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதி விவகாரத்தில், சி.எம்.டி.ஏ.,வுக்கு பின்னடைவுதான். இந்த விவகாரத்தில் சென்னை ஐ.ஐ.டி., வல்லுனர் குழுவின் இறுதி அறிக்கையை பெறுவதிலும், அதை செயல்படுத்துவதிலும், சி.எம்.டி.ஏ., கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.