காசிமேடில் அடுத்தடுத்து இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள் தொடரும் அதிர்ச்சி
சென்னை கடற்கரையில், கடந்த சில வாரங்களாக ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது தொடர்கதையாக உள்ளது. ஒருபுறம் வன ஆர்வலர்கள் மற்றும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மறுபுறம், அழுகிய நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகளால், சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்துள்ளது.
ஒரு சில வாரங்களிலே 200க்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கிய நிலையில், நேற்று காசிமேடு துறைமுக பழைய வார்ப்பு தளத்தில், 20க்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கின. அவற்றை காசிமேடு மீன்வளத் துறையினர் அப்புறப்படுத்தினர்.
இது குறித்து மீன்வளத் துறை அதிகாரி கூறியதாவது:
காசிமேடு கடற்கரை பகுதியில், அதிகளவில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது புதிதாக உள்ளது. இது குறித்து அரசுக்கு தெரிவித்துள்ளோம்.
கடற்கரை பகுதிகளுக்கு முட்டையிட வரும் ஆமைகளுக்கு ஏதோ நெருக்கடி ஏற்படுவதால், அது தன் போக்கை மாற்றி மாற்று இடங்களுக்கு செல்லும்போது, கனவா வலைகள், ‘டிரால் நெட்’ வலைகளில் அடிபட்டும், சுவாச பிரச்னைகளால் இறந்தும் கரை ஒதுங்குவதாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
வரும் 22ம் தேதி மீன்வளத் துறை சார்பில், இதுதொடர்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது.
காசிமேடு கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 40க்கும் மேற்பட்ட ஆமைகளை, வனத்துறையினர், தன்னார்வலர்கள் உதவியுடன் கடற்கரை பகுதிகளில் புதைத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.