சைபர் குற்ற விழிப்புணர்வு ‘வாக்கிங்’ முன்பதிவு செய்ய ‘லிங்க்’ வெளியீடு

சென்னை,சைபர் குற்றங்கள் குறித்து, 1930 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இந்த எண்ணை மக்களிடம் கொண்டு செல்வதற்கான விழிப்புணர்வு நடைபயணத்தில் முன்பதிவு செய்து பங்கேற்க போலீசார், ‘லிங்க்’ வெளியிட்டுள்ளன

கடந்த, 2024ல் மட்டும், தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து, ஆன்லைன் வாயிலாக, சைபர் குற்றவாளிகள், 1,673 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக, 838 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இத்தகையை மோசடிகள் மற்றும் ஆன்லைன் வாயிலாக தரப்படும் பாலியல் தொல்லை உள்ளிட்ட குற்றங்கள் குறித்து, பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக, 1930 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்க வேண்டும்.

இதில், புகார் பதிவு செய்த உடனேயே, வங்கிகளுக்கு தகவல் சென்று விடும். உடனடியாக, சைபர் குற்றவாளிகளின் வங்கி கணக்கையும் முடக்கி விடலாம். அதேபோல, www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம்.

இதுகுறித்து, சென்னை அசோக் நகரில் செயல்படும், சைபர் குற்றப்பிரிவு தலைமையகம் சார்பில், பள்ளி, கல்லுாரிகள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, வரும், 29ம் தேதி மாலை, 5:00 மணியளவில், மெரினா கடற்கரையில் இருந்து, போர் நினைவுச்சின்னம் வரை, ‘சென்னை 1930 விழிப்புணர்வு நடைபயணம்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் பங்கேற்க விரும்புவோர், https://1930walkathon.in/ இந்த லிங்க் வாயிலாக முன் பதிவு செய்ய வேண்டும் என, சைபர் குற்றப்பிரிவு தலைமையக அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *