எம். ஜி. ஆர்., நகர் நோய் தொற்று அபாயத்தில் கழிவுநீரில் தத்தளிக்கும் மக்கள்
திருவொற்றியூர், மழைநீர் வடிகால் பணிகள் பாதியில் விடுபட்டிருப்பதால், தெருக்களில் கழிவுநீர் தேங்கி, மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் நிலவி வருகிறது.
திருவொற்றியூர் மண்டலம், ஏழாவது வார்டு, பழைய எம்.ஜி.ஆர்., நகரில், 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் தினக்கூலிகள்.
இந்த நகரின் பிரதான சாலையையொட்டி, கொசஸ்தலை வடிநிலத்திட்டத்தின் கீழ், ராட்சதமழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மழைநீர் வடிகால் உயரமாக இருப்பதால், குடியிருப்புகள் தாழ்வாகி போய்விட்டன. இது ஒரு புறம் இருக்க, பழைய எம்.ஜி.ஆர்., நகர் – பெரியா நகர் பிரதான சாலை இணைப்பில், மழைநீர் வடிகால் பணிகள் பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதனால், குடியிருப்புகளில் இருந்து பயன்பாட்டு கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் உள்ளது. இதன் காரணமாக, மழைநீர் வடிகாலின் இருபுறமும், குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளது.
வேறு வழியின்றி, கட்டை பாலம் வழியாக மக்கள் வெளியேறி வருகின்றனர். தவிர, பழைய எம்.ஜி.ஆர்., நகர், மூன்றாவது தெருவில், கழிவுநீர் குளம்போல் தேங்கி, அதில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
இந்த கழிவுநீரில் தத்தளித்தபடியாக தான் மக்கள் வெளியேறி, கடைவீதிகள், மருத்துவமனை, பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று வர வேண்டியுள்ளது.
மாலை நேரங்களில், கழிவுநீரில் முகாமிட்டிருக்கும் கொசு வீடுகளுக்குள் படையெடுத்து, குடியிருப்பு வாசிகளை பதம் பார்க்கிறது. இதனால், பலருக்கு காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளன.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், மழைநீர் வடிகால் பணிகளை முடிக்கவில்லை; தெருவில் தேங்கிய கழிவுநீரை வெளியேற்றவும் இல்லை.
இதே நிலை நீடித்தால், இப்பகுதி மக்கள் கிருமித்தொற்று பாதிப்புக்கு தொடர்ந்து ஆளாக நேரிடும். எனவே, மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.