திரிவேணி சங்கமத்தில் நிறுவ மாமல்லையில் திருவள்ளுவர் சிலை
மாமல்லபுரம், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நிறுவ, மாமல்லபுரத்தில் வடிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை அனுப்பப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமம், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் கூடும் ஆன்மிக சிறப்பு வாய்ந்தது.
அப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா, கடந்த ஜன., 13ல் துவங்கியது. 45 நாட்கள் நடைபெறும் கும்பமேளாவில், தினசரி பல லட்சம் பக்தர்கள் புனித நீராடுவர்.
அப்பகுதியில் இயங்கும் பாஷா சங்கத்தினர், அலகாபாத் மாநகராட்சி அனுமதியுடன், திரிவேணி சங்கம தென்கரை சாலைக்கு, திருவள்ளுவர் சாலை என, 2017ல் பெயர் சூட்டினர். அச்சாலை பகுதியில், உத்தரபிரதேச மாநில அரசு, திருவள்ளுவர் கற்சிலையை, தற்போது அமைக்கிறது.
தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம், மாமல்லபுரம் தனியார் சிற்பக்கூடத்தில், அச்சிலையை வாங்கி, அங்கு அனுப்பியுள்ளது. பிரதமர் மோடி சிலையை திறந்து வைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, மாமல்லபுரம் ‘க்ரியேட்டிவ் ஸ்கல்ப்ச்சர்ஸ்’ சிற்பக்கூட உரிமையாளர், பூம்புகார் விருதுபெற்ற பாஸ்கரன் கூறியதாவது:
எங்கள் சிற்பக்கூடத்தில், வேறு தேவைக்காக, 5 அடி உயரம், 4.25 அடி அகலம் அளவில், ஓலைச்சுவடி, எழுத்தாணி ஆகியவற்றுடன் அமர்ந்தநிலையில் உள்ள திருவள்ளுவர் சிலையை, மூன்று மாதங்களுக்கும் மேலாக வடித்து, தயார் நிலையில் வைத்திருந்தோம்.
எங்களை அணுகிய பூம்புகார் நிறுவனத்தினர், அதை வாங்கி, திருவேணி சங்கமத்திற்கு அனுப்பியுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.