மின்னகத்தில் பெறப்பட்ட புகார்களில் சென்னை முதலிடம் மின் தடைகள் குறித்தே அதிக அழைப்புகள்
சென்னை:சென்னை மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம், 2021 ஜூனில் துவக்கப்பட்டது. 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணில், மாநிலம் முழுதும் வசிக்கும் மக்கள் மின் தடை, மின்னழுத்தம், மீட்டர் பழுது உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும், 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.
மையத்தில் பெறப்படும் புகார், கணினியில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படுகிறது. நுகர்வோருக்கும் புகார் எண், எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படுகிறது. இதனால், புகார் மீது பொறியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
கடந்த, 2023 – 24ல் மின்னகத்தில் மொத்தம், 7.62 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில், மின் தடை தொடர்பாக மட்டும், 6.53 லட்சம் புகார்கள் வந்துள்ளன. மின்னழுத்தம் தொடர்பாக, 81,425; மின் சாதனங்களில் தீ, தீப்பொறி, 13,021; உடைந்து விழுந்த மின் சாதனங்கள் குறித்து, 11,389; மின் சாதனங்கள் மேல் மரம் விழுந்தது தொடர்பாக, 2376 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
குறைந்த மின்னழுத்தம் தொடர்பாக, 49,647, உயர் மின்னழுத்தம், 3158, சீரற்ற மின் வினியோகம் தொடர்பாக, 28,620 புகார்கள் பெறப்பட்டு உள்ளன.
சென்னை, காஞ்சிபுரம் உட்பட, 12 மண்டலங்களாக மின் வாரியம் செயல்படுகிறது. கடந்த ஆண்டில் மின்னகத்தில் பெறப்பட்ட மொத்த புகாரில், சென்னை மண்டலத்தில் தான் அதிக அளவாக, 2.76 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன