பெண் எஸ்.ஐ., உட்பட 8 பேரிடம் 30 சவரன் வழிப்பறி அட்டூழியம்! ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்ததால் மக்கள் பீதி

தாம்பரம் தாம்பரம் போலீஸ் ஆணையரக எல்லையில், நேற்று முன்தினம் இரவில் மட்டும், பெண் சப் – இன்ஸ்பெக்டர் உட்பட எட்டு பேரிடம், அடுத்தடுத்து நடந்துள்ள வழிப்பறி சம்பவம், பொதுமக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. 30 சவரனுக்கு மேல் செயின் பறித்து தப்பிய மர்ம நபர்களை பிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லையில், சமீப காலமாக செயின் பறிப்பு, மொபைல் போன் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

போலீசாரின் அலட்சியமே, இக்குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு காரணமாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அதற்கு சான்றாக, நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில், எட்டு இடங்களில், அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.

செங்கல்பட்டு அடுத்த மெய்யூரைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம், 26. இவர், தான் பணிபுரியும், மறைமலை நகர் அண்ணா சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவன வாசலில், தன் ‘பல்சர்’ இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார்.

நேற்று முன்தினம் மாலை, இவரது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.

இந்த திருட்டு வாகனத்தில் சென்று, மறைமலை நகர், ஊரப்பாக்கம், காரணைபுதுச்சேரி, நெல்லிக்குப்பம் கூட்டு சாலை, பீர்க்கன்காரணை, தாம்பரம், சேலையூர், ஆதனுார் உள்ளிட்ட இடங்களில், பெண் சப் – இன்ஸ்பெக்டர் உட்பட எட்டு பேரிடம், செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

1. மறைமலை நகர், சேக்கிழார் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 50. அப்பகுதியில் சிறிய மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை, இவரது கடைக்கு சென்ற மர்ம நபர்கள், ராஜேஸ்வரியிடம் சிகரெட் வாங்கி புகைத்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து, மீண்டும் ஒரு சிகரெட் கேட்டுள்ளனர். ராஜேஸ்வரி எடுக்க திரும்பிய போது, அவரின் 5 சவரன் செயினை பறித்து மாயமாகினர்

2. கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம், சுவாமி நகரைச் சேர்ந்தவர் துர்கா. மளிகை கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு சென்ற மர்ம நபர்கள், சிகரெட் பிடிப்பதுபோல் நடித்து, துர்கா அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்தனர்.

3. பீர்க்கன்காரணை, தேவனேச நகரைச் சேர்ந்தவர் முனீஸ்வரி, 33. நேற்று முன்தினம் இரவு, வீட்டு வாசலில் நின்று, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், முனீஸ்வரியின் அரை சவரன் மதிப்புள்ள தாலியை பறித்து, மின்னல் வேகத்தில் பறந்தனர்.

4. ஆதனுாரைச் சேர்ந்தவர் சுமதி, 60. இவரது கணவர் லாரன்ஸ், ஓய்வுபெற்ற சி.ஆர்.பி.எப்., அதிகாரி. நேற்று முன்தினம் மாலை, மண்ணிவாக்கம் – ஆதனுார் சாலை வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

அப்போது, பல்சர் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சுமதியின் 7 சவரன் செயினை பறித்துள்ளனர்.

சுதாரித்த சுமதி, செயினை விடாமல் பிடித்து கொண்டதால், செயின் அறுந்து, 5 சவரன் மதிப்புள்ள பாதி செயினை மட்டும், மர்ம நபர்கள் பறித்து தப்பினர்.

5. சிட்லப்பாக்கம், பாம்பன் சுவாமிகள் சாலையை சேர்ந்தவர் ஈஸ்வரி, 56. கிழக்கு தாம்பரம், ரயில்வே மைதானத்தில் நடந்து வரும் தனியார் கண்காட்சிக்கு நேற்று முன்தினம் சென்றார்.

அங்கிருந்து, இரவு நடந்து வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஈஸ்வரியின் 8 சவரன் செயினை பறிக்க முயன்றனர்.

சுதாரித்த ஈஸ்வரி, செயினை விடாமல் பிடித்ததால், 5 சவரன் பாதி செயினை பறித்து தப்பினர்.

6. மேற்கு தாம்பரம், தேவராஜ் தெருவைச் சேர்ந்தவர் இந்திரா, 58; பெண் சப் – இன்ஸ்பெக்டர். சென்னை போலீஸ் ஆணையரகத்தில் உள்ள உதவி மையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, 9:45 மணிக்கு பணி முடிந்து, பேருந்தில் தாம்பரம் வந்த இந்திரா, அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், இந்திராவின் 5.5 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.

அதேபோல், கூடுவாஞ்சேரி அடுத்த காரணைபுதுச்சேரி மற்றும் நெல்லிக்குப்பம் கூட்டுச்சாலை ஆகிய இடங்களிலும், தனியாக சென்ற பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

இப்படி, ‘பல்சர்’ வாகனம் திருட்டு மற்றும் தொடர்ச்சியாக எட்டு இடங்களில் நடந்த வழிப்பறி சம்பவங்களால் பீதியடைந்த அந்தந்த பகுதியினர், அவசர உதவி புகார் மையம், எண்: ‘100’க்கு அடுத்தடுத்து புகார்கள் விடுத்தனர்.

இதையடுத்து, ஆங்காங்கே ரோந்து பணியில் இருந்து போலீசார் முடுக்கிவிடப்பட்டனர். அதனால், பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள், பலத்த சோதனைக்கு பின்னரே அனுப்பப்பட்டன.

இதில், மேற்கு தாம்பரம், காந்தி சாலை சிக்னல் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த செயின் பறிப்பு திருடர்கள், ‘பல்சர்’ வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு, தப்பி ஓடினர்.

இந்த பல்சர் வாகனம், ஜீவரத்தினத்திற்கு சொந்தமானது எனவும், இதை வைத்தே எட்டு இடங்களில் வழிப்பறி செய்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தாம்பரம் துணை கமிஷனர் பவன்குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து தனிப்படையினர், தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தாம்பரம் ஆணையரக போலீசார் கூறியதாவது:

குற்றச்சம்பவம் நடந்த ஒன்பது இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

முதற்கட்ட விசாரணையில், அனைத்து சம்பவங்களிலும் ஈடுபட்டது, பல்சர் இருசக்கர வாகனத்தை திருடிய இரு மர்ம நபர்கள் தான் என்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த, 25 முதல் 30 வயதுடைய வாலிபர்கள். செயின் பறிப்பு சம்பவங்களில் 30 சவரன் நகைகளை பறித்துள்ளனர்.

அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர். கடையில் சிகரெட் கேட்கும்போது எதுவும் பேசவில்லை. சைகை காட்டியே சிகரெட் பெற்றுள்ளனர்.

தாம்பரம் காந்தி சாலை சிக்னலில், போலீசார் சோதனை செய்வதை அறிந்து, வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பியுள்ளனர்.

இருவரும், வெவ்வேறு திசையில் ஓடுவது கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், வாகனத்தில் வைத்திருந்த சட்டையை மாற்றிக்கொண்டு தப்பியுள்ளனர். எனினும், முக்கிய துப்பு கிடைத்துள்ளது.

கூடுவாஞ்சேரி சரகத்தில் இரண்டு, தாம்பரம் சரகத்தில் இரண்டு, சேலையூர் சரகத்தில் ஒன்று என, ஐந்து தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

போலீசார் பொங்கல் கொண்டாட்டம்

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் சார்பில், சோழிங்கநல்லுாரில் உள்ள தனியார் கல்லுாரியில், நேற்று முன்தினம் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதில், தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மோதக், உயர் மட்ட போலீஸ் அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.முக்கிய அதிகாரிகள் பொங்கல் விழாவிற்கு கூடியதை அறிந்தே, மர்ம நபர்கள் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், போதிய அளவில் ரோந்து உள்ளிட்ட பணியில் போலீசார் இருந்திருந்தால், இக்குற்றத்தை தடுத்திருக்கலாம் எனவும், போலீசாரே தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *