பர்னிச்சர் கடையில் பயங்கர தீவிபத்து: பொருட்கள் எரிந்து நாசம்
தாம்பரம், ஜன.19: தாம்பரம் அடுத்த வண்டலூர் – கேளம்பாக்கம் பிராதன சாலையில் கீழக்கோட்டையூர் பகுதியில் ஜாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை உள்ளது. 2 தளங்கள் கொண்ட இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு, தீவிபத்து ஏற்பட்டு, கடை முழுவதும் பற்றி எறிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கேளம்பாக்கம், வண்டலூர், சிறுசேரி, தாம்பரம் பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டரை மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து தாழம்பூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். அதில், மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடையில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.