நீதிமன்ற ஊழியர் லாரி மோதி பலி ரூ.52 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

சென்னை, திருவள்ளூர் அருகே எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதியதில் உயிரிழந்த நீதிமன்ற ஊழியரின் குடும்பத்தினருக்கு, 52.01 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியைச் சேர்ந்தவர் பாபு, 47; நீதிமன்ற ஊழியர். இவர், தன் டூ-வீலரில், 2019 நவ., 19ல், 200 அடி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

மஞ்சம்பாக்கம் அருகே சென்றபோது, பாபு மீது எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதியது. இதில், கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தந்தையின் இறப்புக்கு 90 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், மகன் பரத் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

அதிவேகமாக வந்த ஆயில் டேங்கர் லாரி, டூ-வீலரின் பின்னால் மோதியுள்ளது என்பதை, சாட்சிகள் வாயிலாக போலீசார் நிரூபித்துள்ளனர். டூ-வீலரில் இருந்து கீழே விழுந்த பாபு மீது, லாரி ஏறி இறங்கியதில் உடனே இறந்து உள்ளார்.

விபத்துக்கு டூ-வீலர் ஓட்டியவரே பொறுப்பாவர் என்ற குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள், ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. விபத்துக்கு லாரி ஓட்டுநர் தான் காரணம்.

எனவே, மனுதாரரின் தந்தை இறப்புக்கு இழப்பீடாக, 52.01 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் காப்பீடு நிறுவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *