புழல் ஏரியில் கலக்கும் அவலம் : மழைநீர் வடிகாலில் பாயும் கழிவுநீர்
சென்னை, சென்னை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக புழல் ஏரி உள்ளது. 3.3 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில், மழைநீர் வடிகாலில் பாயும் கழிவுநீர், கலக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அம்பத்துார் தென்றல் நகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில் பாயும் கழிவுநீர் கலந்து, அப்பகுதி தண்ணீர் நிறம் மாறி உள்ளது.
இது, மழைநீர் வடிகாலில் முறைகேடாக கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
தவிர, திருவள்ளூர் கூட்டுச்சாலை மற்றும் அம்பத்துார்கரைப்பகுதிகளில், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மாலை வேளைகளில் ஏரிப்பகுதியில் இருந்து, சுற்றுவட்டார வீடுகளில் ஏரிப்பூச்சிகள் படையெடுக்கின்றன. இதனால், இரவு 7:00 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
தென்றல் நகர் பகுதி மக்கள் கூறியதாவது:
நல்ல தண்ணீரில் இதுபோன்ற பூச்சிகள் வராது என்கின்றனர். இங்கு கழிவுநீர் கலப்பதால் பூச்சி உற்பத்தி அதிகம் இருக்கிறது. புழல் ஏரி கரைப்பகுதி முழுதும் இந்த பூச்சி பாதிப்பு உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தால், ‘நாங்கள் கொசுக்களை மட்டுமேகவனிப்போம். ஏரிப்பூச்சி எங்கள் கவனத்திற்கு வராது’ என்கின்றனர்.
குறிப்பாக, மழைநீர் கால்வாயை துார்வாரி கழிவுநீர் கலக்கும் முறைகேடான இணைப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால், புழல் ஏரியில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும். இதுபோன்ற பூச்சிகளின் உற்பத்தியும் குறையும்.
ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்